தேனி:தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே குச்சனூர் சாலையில் ஒரு நபர் கையில் வாக்கி டாக்கியுடன் அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்பவர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.
அவரது ஆட்டோவை நிறுத்திய நபர், தான் தேனி சிபிசிஐடி போலீஸ் என்று கூறி வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆட்டோவில் ஆவணங்கள் சரியாக உள்ளதா என கேட்டு ஆவணங்களை எடுத்து வர சொல்லியுள்ளார். ஆனால் இவரின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததால் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க:நெல்லையில் ஆயுதங்களுடன் தாக்கி கொண்ட சிறுவர்கள்; பகீர் கிளப்பும் வீடியோ!
தனுஷ் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டு நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், அவர் போலீ சிபிசிஐடி எனவும் தேனி அருகே அல்லிநகரம் பகுதியை சேர்ந்த வீனஸ் கண்ணன் (50) என்பதும் தெரிய வந்தது. மேலும் குடிபோதையில் இதுபோன்ற வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தாரா? என இவரிடம் வாக்கிடாக்கி எப்படி வந்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETV Bharat)