சேலம்:கடந்த சில மாதங்களாக சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவற்றைக் கண்டித்து அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் என்பவர் வகுப்பறையில் ஆழ்ந்து உறங்கும் காட்சிகளை, பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற பதிவாளர் (பொறுப்பு) தங்கவேலு ஈடிவி பாரத்திற்கு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "பல்கலைக்கழகத்தில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை.
ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தினரும் திட்டமிட்டு நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் வகுப்பறையில் மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுக்காமல் தினந்தோறும் உறங்குவதையே வேலையாக வைத்துள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு புகார் அனுப்பியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.