தூத்துக்குடி: கோவில்பட்டி அடுத்த எட்டயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டயபுரம் நகரச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.
மீண்டும் பாஜவுடன் கூட்டணியா?:அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, "மத்தியில் தனி மெஜாரிட்டியுடன் இருந்த பாஜக இன்றைக்கு கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைதான். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அனுபவத்தினால் தான் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை எனத் தெளிவாக தெரிவித்துவிட்டார். கூட்டணி குறித்து அண்ணாமலை பேச வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், கொல்லைப்புறமாக அதிமுக கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார். மத்தியில் உள்ள பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை கடிந்து கொள்வதால் கூட்டணி கருத்துக்களைக் கூறி வருகிறார். இதற்கும் அதிமுகவிற்கும் சம்பந்தமில்லை.
போதை ஒழிப்பு உறுதிமொழி என்பது கேலிக்கூத்து:மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நாணயம் வெளியீடு விழாவிற்கு மத்திய அமைச்சர்கள் வருவது இயற்கையான நிகழ்வுதான். இதில் அரசியல் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கள்ளச்சாராய சாவு, போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. திமுகவினரே போதைப் பொருட்களை கடத்தும் நிலை இருக்கும்போது, போதை ஒழிப்பு உறுதி மொழியை எடுத்ததை கேலிக்கூத்தாகத் தான் மக்கள் பார்ப்பார்கள்.
2026-ல் நாதக, தவெகவுடன் அதிமுக கூட்டணியா?:அரசியலில் எந்த நிகழ்வு வேண்டுமானாலும் வரும். நிச்சயமாக அவர்கள் யாரும் திமுக ஆட்சியை விரும்பவில்லை. ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இது இந்தியா கூட்டணியோ அல்லது திமுக வெற்றியோ கிடையாது. தமிழக வாக்காளர்கள், தமிழக மக்கள் பாஜகவிற்கு எதிரான மனநிலையில் இருந்தனர்.