தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு! - Tamizh University in Chennai - TAMIZH UNIVERSITY IN CHENNAI

Tamizh University in Chennai: தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளது போல சென்னையிலும் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 4:41 PM IST

சென்னை:சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சி.கனகராஜ், கடந்த 2021ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் 6 பொதுநல வழக்குகளை தனித்தனியாக தொடர்ந்திருந்தார். இந்த பொதுநல வழக்குகள் அனைத்தும் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய முதன்மை முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

தமிழ் பல்கலைக்கழகம்: தஞ்சையில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இதே போல தலைநகரான சென்னையிலும் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கனகராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த மொழிக்கென தலைநகரில் தனியாக பல்கலைக்கழகம் உள்ளதாகவும், அது போன்ற நிலை தமிழகத்தில் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி, இது போன்று மாவட்டம்தோறும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கேட்பீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர், தலைநகரான சென்னையில் மட்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

அகதிகளுக்கு குடியுரிமை:தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 58 ஆயிரம் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், உரிய வசதிகள் செய்து தரப்படுவதுடன் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் கனகராஜ் வாதிட்டார். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழில் விமான சேவை அறிவிப்பு:அதனைத் தொடர்ந்து, உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவை அறிவிப்புகளை தமிழில் வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அடங்கிய அமர்வு, மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

தமிழ் வளர்ச்சி:அடுத்ததாக, தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதலாக நிதி ஒதுக்கக் கோரிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், "இது போன்ற வழக்கு ஒன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது என்றும், அதில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமஸ்கிருதத்தை வளர்க்க 645 கோடி ரூபாயும், தமிழ் மொழிக்கு 22 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது" என்று பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் சுட்டி காட்டினார். அதற்கு மனுதாரர் சார்பில், தமிழ் வளர்ச்சி விவகாரத்தில் மாநில அரசு அலட்சிய போக்காக உள்ளது என்றும், இதனால் மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அதற்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், தமிழ் வளர்ச்சி தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறை படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து பதில் அளிக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:தாளவாடி மலை கிராமத்தில் மர்ம நோய் தாக்கி 6 பேர் பலி; மருத்துவத்துறை அதிகாரிகள் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details