சென்னை: டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உட்பட இதுவரை ஐந்து பேரை மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இவர்கள் போதை பொருட்கள் கடத்தியதும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே வழக்கு ஒன்று பதிவு செய்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் மற்றும் அவருடன் தொழில் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர்களின் இடங்களில் கடந்த 9ஆம் தேதி சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை ஜாபர் சாதிக் எந்தெந்த தொழிலில் முதலீடு செய்துள்ளார் எனவும், யாருக்கெல்லாம் கொடுத்துள்ளார் என்பதையும் கண்டறிய அமலாக்கத்துறை அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ஜாபர் சாதிக்கின் சொத்து ஆவணங்கள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.