மருதமலை கோயில் படிக்கட்டில் முகாமிட்ட யானைகள் கோயம்புத்தூர்:மேற்குத் தொடர்ச்சி மலையில் நிலவும் கடும் வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக யானைகள் வனப்பகுதியிலிருந்து அருகில் உள்ள கிராமங்களுக்குப் படையெடுத்து வரும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காகக் கிராமங்களுக்குள் புகும் காட்டு யானைகள், விளை நிலங்களைச் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீட்டில் வைத்திருக்கும் அரிசி, மாட்டுத் தீவனங்களைச் சாப்பிடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகக் கோயம்புத்தூர் மாவட்டம் கரடிமடை, தீத்திபாளையம் பகுதிகளில் சுற்றிவரும் 14 யானைகள் கொண்ட கூட்டம், அங்கிருந்து வெளியேறி நேற்றைய முன்தினம் (ஏப்.12) மாதம்பட்டி வழியாக வந்தது. அதன்பின், அந்த யானைக்கூட்டம் தொண்டாமுத்தூர் சாலை, தீனாம்பாளையம் மற்றும் ஓனாப்பாளையம் வழியாக யானை மடுவு வனப்பகுதிக்குள் சென்றது.
இத்தகைய சூழ்நிலையில், அங்கிருந்து வெளியேறிய யானைகள் நேற்று (சனிக்கிழமை) வடவள்ளி அடுத்த மருதமலை அடிவார பகுதிக்கு வந்து, கோயிலுக்குச் செல்லக்கூடிய மலை படிக்கட்டில் முகாமிட்டது. இதன் பின்னர், அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் நீண்ட நேரம் விளையாடிய யானைகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே முகாமிட்டிருந்தன.
இதன் காரணமாக, பக்தர்களின் பாதுகாப்பு கருதி படிக்கட்டு வழியாகவும், மலைப் பாதை வழியாக வாகனங்களில் செல்லவும் வனத்துறையினர், பக்தர்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனிடையே, அங்கிருந்த தாய் யானை மற்றும் அதன் குட்டி யானை விநாயகர் கோயிலுக்குள் புகுந்து அங்கிருந்த தேங்காய் மற்றும் பழங்களைச் சாப்பிட்டது.
இதனைத் தொடர்ந்து, இரண்டு மணி நேரம் கழித்து 14 யானைகளும் மலைப்பாதையைக் கடந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானைகள் மருதமலை கோயில் படிக்கட்டில் முகாமிட்டதால் மலைமேல் கோயிலுக்குச் சென்ற பக்தர்களும் அடிவாரத்தில் கோயிலுக்குச் செல்ல இருந்த பக்தர்களும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தனர். இதனால், மலை அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூறுகையில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு யானைக் கூட்டம் படிக்கட்டில் தென்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம், வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு பக்தர்கள் அந்த வழியாக செல்லாமல் தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. எனினும், இரவு நேரமானதால் பெரும்பாலான பக்தர்கள் கோயிலுக்கு வந்து விட்டு சாமி தரிசனம் செய்யாமலேயே வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று தெரிவித்தனர்.
மேலும், படிக்கட்டில் இருந்த யானைகள் மலைப் பாதையைக் கடந்து வனப்பகுதிக்குள் செல்லும்போது, அங்கிருந்த பக்தர்கள் கூச்சலிட்டதால் கூட்டத்தில் இருந்த யானை பிளிர அங்கிருந்த பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"ஜாடிக்கேத்த மூடி, அது நம்ம மோடி" - பஞ்ச் பேசி பாஜகவுக்கு வாக்கு சேகரித்த கூல் சுரேஷ்!