திருச்சி: திருச்சி சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் கீரதி (65) என்ற பெண் யானை கடந்த 2 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தூத்துக்குடி பகுதியில் உரிமம் இல்லாமலும், வளர்ப்பு யானை விதிகளுக்கு புறம்பாக, சரியான பராமரிப்பு இல்லாமல் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த யானை 2 ஆண்டுகளுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட யானைகள் பராமரிப்பு கமிட்டியின் பரிந்துரையின் வாயிலாக, சென்னை தலைமை வன உயிரின காப்பாளர் ஆணையின் பேரில், திருச்சி எம்ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமில் வைத்து சிகிச்சை அளித்து பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக யானையின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்துவந்தது. மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், வன கால்நடை மருத்துவர்கள் குழு சிகிச்சை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி யானை இறந்தது.
இச்செய்தி குறித்து திருச்சி மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்ததும் யானையை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து, இன்று திருச்சி மாவட்ட வன அலுவலர், வன கால்நடை மருத்துவர்கள், திருச்சி மண்டல நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் தலைமையிலான குழு, பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன்னிலையில், பிரேத பரிசோதனை செய்து முகாம் வளாகத்தில் யானை அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:வ.உ.சி வன உயிரியல் பூங்காவின் கடமான்கள் விடுவிப்பு.. துள்ளி ஓடும் அழகிய காட்சிகள்!