தருமபுரியில் 15 நாட்களாக சுற்றி திரிந்த யானை.. மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை! தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஒற்றை ஆண் யானை ஊருக்குள் நுழைந்தது. இந்த யானை காரிமங்கலம், பாலக்கோடு, கம்பைநல்லூர், தருமபுரி, நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்து, விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
இந்த சூழலில், கடந்த நான்கு நாட்களாக வத்தல் மலை அடிவாரத்தில் ஆண் யானை சுற்றித் திரிந்து வந்தது. இதனையடுத்து, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (மார்ச் 15) காலை முதல் பொம்மிடி, சில்லாரஹள்ளி பகுதிகளின் மலை அடிவாரத்தில் யானை சுற்றித் திரிந்தது.
இதனை அடுத்து, வனத் துறையினருக்கு 15 நாட்களாக போக்கு காட்டி வரும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு எடுத்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர், நேற்று காலை முதல் யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
தொடர்ந்து இரவு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பொழுது கால்நடை மருத்துவர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினார். தொடர்ந்து மூன்று மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மயக்க நிலையில் இருந்த யானையை அதிகாலை 3 மணி அளவில் சில்லாரஹள்ளி மலைப்பகுதியில் கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் பிடித்தனர்.
பின்னர் பிடிக்கப்பட்ட ஆண் யானையை லாரி மூலமாக அஞ்செட்டி வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் எடுத்துச் சென்றனர். மேலும், கடந்த 15 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த ஒற்றை ஆண் யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், 3 மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:மன்சூர் கட்சியில் மன்சூரே இல்லையா? - "ஆடியோ ஆதாரம் இருக்கு" என எச்சரிக்கை