கோயம்புத்தூர்:மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியைச் சேர்ந்தவர் மனுதீப் கோஷ்(45). வங்கி ஊழியரான இவரின் மனைவி தேவ ஸ்ரீகோஸ். இவர்களது குழந்தை மற்றும் தேவ ஸ்ரீகோஸ் தந்தை, தாய் என 5 பேரும் கொல்கத்தாவில் இருந்து ஊட்டிக்குச் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த 22ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டு இன்று (திங்கட்கிழமை) மேட்டுப்பாளையம் வந்தடைந்தனர். பின்னர், தனியார் கார் மூலம் ஊட்டிக்குச் செல்லும் வழியில் கல்லாறு அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இவர்கள் வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது, அவர்களிடமிருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து தொகையை கலெக்டர் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். அப்போது, அதிகாரிகளிடம் ஊட்டிக்குச் சுற்றுலா வந்ததாகவும், இதய நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியோர் இருப்பதாகவும், சுற்றுலாவுக்காகப் பணம் கொண்டு வந்ததாகவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
இருப்பினும் அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், திரும்ப ஒப்படைக்க முடியாது என மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "நாங்கள் கொல்கத்தாவில் இருந்து எங்களது குழந்தை மற்றும் அப்பா, அம்மா ஆகியோருடன் 5 பேர் ஊட்டிக்குச் சுற்றுலாவுக்காக வந்தோம்.
25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் தங்கிச் சுற்றிப் பார்த்துவிட்டு, கர்நாடக மாநிலம் கூர்க் சென்று, பின்னர் ஏப்ரல் 2ஆம் தேதி கொல்கத்தாவிற்குத் திரும்பிச் செல்வதாகத் திட்டமிட்டு இருந்தோம். இந்நிலையில், மேட்டுப்பாளையம் வந்த போது, போலீசார் நாங்கள் வந்த வாகனத்தைச் சோதனையிட்டு, எங்களின் சுற்றுலா மற்றும் மருத்துவச் செலவு, உணவு, விடுதி செலவுக்காக வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதனால், பணத்தைத் திரும்பப் பெற வேண்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வந்துள்ளோம். பணத்தைத் திருப்பி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், தேர்தல் விதிகள் காரணத்தைக் கூறி, தற்போது எங்களை அலைக்கழித்து வருகின்றனர். மொழி பிரச்சனை இருப்பதால், எங்கள் தரப்பு விளக்கத்தை அதிகாரிகள் சரிவரக் கேட்கவில்லை.
இதனால் எங்களின் சுற்றுலா பயணம் பாதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகளிடம் இது போன்ற நடவடிக்கைகளில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபடக் கூடாது. காரில் புற்றுநோய் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்ட தம்பதியினர், சிறு குழந்தை இருந்தும், சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் இரக்கம் காட்டவில்லை. சுற்றுலா வரும் நாங்கள் எப்படிப் பணத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடியும்.
இது போன்ற கெடுபுடியால் சுற்றுலா வருவோர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். காலையில் ஊட்டி செல்ல வேண்டிய நாங்கள், மாலை ஆகியும் செல்லவில்லை. ஏற்கனவே திட்டமிட்ட எந்த ஒரு இடத்திற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்று நடைபெறாமல் இருக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.
இதையும் படிங்க:நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், விளவங்கோடு இடைத்தேர்தலில் தாரகை கத்பட் போட்டி! - Nellai Congress Candidate