சென்னை:நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்குபதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து தங்களது ஜனநாயக கடைமை ஆற்றி வருகின்றனர்.
ஏகனாபுரம்:காலை 10 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை போல் தெரிகிறது. பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை மேற்கொண்டு வந்த ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் கடந்த சில நாள்களுக்கு முன்னர் தபால் வாக்குகள் பெற வந்த அதிகாரிகளையும் திருப்பி அனுப்பினர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதனையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருமான கலைச்செல்வி மோகன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்ககளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக ஏகனாபுரம் கிராம மக்கள் அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று(வெள்ளிக்கிழமை) காலை முதல் வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் யாரும் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை போல் தெரிகிறது. இதனால் காலை 7 மணி முதல் வாக்குசாவடிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
வேங்கை வயல்:புதுக்கோட்டை அருகே வேங்கை வயல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதனை கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்துள்ளனர் அப்பகுதி மக்கள். காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் யாரும் வாக்களிக்க முன்வராத காரணத்தால் வாக்குச்சாவடி மையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் குறித்தான தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இச்சம்பவம் நடந்து 15 மாதங்களாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இதனால் நாடளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அக்கிராம மக்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இறையூர் மற்றும் வேங்கைவயல் கிராமத்தில் 600 வாக்களர்களில் ஒருவர் கூட வாக்குச்சாவடி மையத்திற்கு வரவில்லை. தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவது வருகிறது.
இருப்பினும் குற்றவாளிகள் கண்டுபிடிக்காத வரை நாங்கள் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்று பொதுமக்கள் அவர்களிடம் திட்டவட்டமாக அதிகாரிகளிடம் கூறிவிட்டதால் அவர்கள் செய்வதறியாது திகைத்து உள்ளனர். தொடர்ந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையானது நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் எப்படி இருக்கு? ஆன்லைனில் அறியலாம்!