சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் நாளான இன்று சிவகங்கை மற்றும் வேலூர் தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அடுத்தகட்ட உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் எப்படி சிறப்பாக செயலாற்றுவது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், பெண்களையும், இளைஞர்களையும் அதிகமாக கட்சிப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்னைகளை இனங்கண்டு மாதத்திற்கு இரண்டு போராட்டங்களையாவது முன்னெடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கியதாகவும் கூறினர்.