மதுரை: பரமக்குடியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கான முயற்சியை மேற்கொள்வது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, "ஓபிஎஸ் நினைக்கலாம், ஆனால் எங்கள் தலைமை அதற்கு உடன்படாது. பொதுக்குழு கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கிவிட்டோம். அவர் விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது, வெண்ணிற ஆடை நிர்மலா எதிர்த்து போட்டியிட்டதற்கு சீஃப் ஏஜென்ட் ஆக ஓபிஎஸ் இருந்தார்.
நாங்கள் ஒன்றாக இருந்த போது பல கோரிக்கைகளை வைத்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொன்னார். யாரை சுட்டிக்காட்டி சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அதற்கு ஆணையம் வைத்து விசாரித்தோம். விசாரணை ஆணையம் அமைக்க என்னை நிர்பந்தப்படுத்தினார்.
சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவி வேண்டும் என்று கேட்டார். 97 சதவீதம் பேர் அப்போது எங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் கூட மூத்த நிர்வாகிகளிடம் கேட்டு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம். 2019-ல் தேனியில் அவர் மகன் போட்டியிட்டதற்கு அங்கு மட்டும் தான் வேலை பார்த்தார், மற்ற தொகுதிகளில் வேலை செய்யவில்லை.
கட்சியைப் பற்றி கவலைப்படாமல் மகனைப் பற்றி கவலைப்பட்டார். ஒற்றைத்தலைமை வேண்டும் என்கிறபோது அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அவர் ஒத்துக் கொள்ளவே இல்லை.
அதன் பிறகு தான் அவர் நீதிமன்றம் சென்றார். பொதுக்குழு கூடி நடவடிக்கை எடுத்து ரவுடிகளை வைத்து கட்சியினரைத் தாக்கி தலைமை அலுவலகத்தில் கதவுகளை உடைத்து உள்ளிருந்த பொருட்களை சூறையாடி திருடிச் சென்றனர். இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நாடாளுமன்றத் தேர்தலிலாவது கட்சிக்கு இணக்கமாக இருப்பார் என்று பார்த்தால், ராமநாதபுரத்தில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார். இவர் எப்படி விசுவாசமாக இருப்பார்? அவர் விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை. அதிமுகவில் அவர் இணைய ஒரு சதவீதமும் வாய்ப்பில்லை" எனக் கூறினார்.
அண்ணாமலை தான் பச்சோந்தி:தொடர்ந்து, அண்ணாமலை தன்னை துரோகி என்று கூறியது குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு, “அண்ணாமலை தான் பச்சோந்தி, நான் துரோகி அல்ல. துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலை தான். எங்கள் தலைவர்களை அவதூறாக கீழ்த்தரமாக விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்துக் கொள்வோம்.
எங்களை ஆளாக்கிய தலைவர்களைப் பற்றி பேசினால் எங்களுக்கு எப்படி உள்ளக்குமுறல் வரும். இவர் கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தம் இல்லாதவர். நாங்கள் அவரைப் போல் அப்பாயின்மென்டில் வரவில்லை. கண்ணாடியில் முகத்தைப் பார்த்து அவர் தெரிந்து கொள்ள வேண்டும்" என கடுமையாக சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கள்ளச்சாராயம் விவகாரத்தை மாநில அரசு விசாரித்தால் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள். மதுவிற்கு பழக்கமானவர்கள் உடனடியாக நிறுத்த முடியாது என்பது எனக்கு வந்த தகவல். எனவே, படிப்படியாக குறைத்து தான் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியும்" என கூறினார்.
இதையும் படிங்க:"தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது" - எடப்பாடி பழனிசாமி காட்டம்!