தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை.. எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்! - Edappadi K Palaniswami

AIADMK alliance for MP election: பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக மயிலாடுதுறை சென்ற எடப்பாடி பழனிசாமி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Edappadi K Palaniswami
எடப்பாடி பழனிசாமி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 10:08 PM IST

Updated : Feb 18, 2024, 10:49 PM IST

எடப்பாடி பழனிசாமி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி முன்னிலையில் சிறுபான்மையினர் உட்பட 3ஆயிரம் பேர் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க வில் இணையும் விழா இன்று (பிப்.18) நடைபெற்றது.

இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாற்றுக் கட்சியிலிருந்து அதிமுகவில் சேர்ந்தவர்களை வாழ்த்தி சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசியதாவது, "தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் உள்ளன. ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தொண்டரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி.

ஒரு சாதாரண தொண்டன் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக இருப்பது அ.தி.மு.கவில் தான். அதிமுக மட்டும்தான் ஜனநாயக கட்சி. மயிலாடுதுறை மாவட்டத்தைத் தனியாகப் பிரித்து புதிய மாவட்டமாக அறிவித்தது, சீர்காழியை வருவாய் கோட்டமாக அமைத்ததும், ஏழை எளிய மக்களின் கல்வியைக் கருத்தில் கொண்டு சீர்காழியில் அரசு கலைக்கல்லூரி கொடுத்ததும், டெல்டா மாவட்ட விவசாயிகளைப் பாதுகாக்கும் விதமாக டெல்டா பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்தது அதிமுக அரசுதான்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அமைச்சராக இருந்த ஸ்டாலின் தான் மீத்தேன் திட்டத்திற்குக் கையெழுத்துப் போட்டார். மீத்தேன் ஈத்தேன் திட்டங்களுக்குக் கையெழுத்திட்டவர் தான் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின். அதனைத் தடுத்து நிறுத்தியது அதிமுக அரசுதான். குடிமராமத்து திட்டத்தின் மூலமாக டெல்டா மாவட்டத்தில் உள்ள ஆறு குளங்கள், ஏரிகள் முழுவதுமாக தூர்வாரப்பட்டது. அதனை விவசாயிகளே முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஒரு பிடி மண்ணை கூட மற்றவர் எடுக்க முடியாமல் பாதுகாத்து விவசாயிகளைப் பாதுகாத்தது அதிமுக அரசுதான்.

பயிர்க் காப்பீடு திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிகபட்சமாகத் தொகையை விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசுதான். இன்றைய தி.மு.கவின் நிலை என்ன ஜூன் மாதம் முதல்வர் தண்ணீரைத் திறந்து விட்டார். நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கு நீரைக் கர்நாடகத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலினால் பெற முடியவில்லை. தண்ணீர் வராத காரணத்தினால் இரண்டு மாதங்களில் தண்ணீர் இல்லாமல் போனது. இதனால் டெல்டா மாவட்டம் முழுவதும் குருவைப் பயிர்கள் காய்ந்து கருகிப் பாதிக்கப்பட்டது.

விடியா திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து மூன்று ஆண்டுகளாக குருவைச் சாகுபடி காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 3.5 லட்சம் ஏக்கர் குருவைச் சாகுபடி காய்ந்து பாதிக்கப்பட்டது. ஒரு எக்டருக்கு 84 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு எதிரான கட்சி திமுக‌. மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. அதனை மாநில அரசும் கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழை எளிய மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக நமது அரசால் வழங்கப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தியது தான் திமுக அரசின் சாதனை. ஏழை எளிய மக்களின் நலன் கருதி கிராமப்புறங்களில் அம்மா மினி கிளினிக் ஆரம்பித்து சிகிச்சை பெறும் முறையைக் கொண்டு வந்தோம். அதையும் விடியா திமுக அரசு மூடிவிட்டது. ஏழைகளுக்குச் சிகிச்சை செய்வதையும் தடுத்து சாதனையும் இவர்களையேச் சேரும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஊர் ஊராகப் பேசினார்கள்.

ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு தான் எனத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என்ன செய்தார். இன்றும் பல்வேறு கூட்டங்களில் நீட் தேர்விற்கு ரத்து செய்வதற்கான ரகசியம் உள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் அதன் ரகசியம் என்ன என்று இதுவரை கூறவில்லை. நீட் தேர்வு ரத்து செய்வதற்காக இளைஞர்களிடம் கையெழுத்து வாங்கி குடியரசுத் தலைவரிடம் கொடுப்பதாகத் தெரிவித்தனர். அவை பயனற்று குப்பைத்தொட்டிகளில் கிடைக்கிறது. அவர்களது அறிவிப்பு பிரமாண்டமாக இருக்கும் மக்களை ஏமாற்றுவதும், பிரமாண்டமாக இருக்கும். பேச்சில் கவர்ச்சி இருக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக அப்படித்தான் பேசுவார்கள்.

ஏழை மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்பதற்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்காக மருத்துவ கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கியது அதிமுக அரசுதான். மேலும் ஏழை மாணவர்களின் நலன் கருதி அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அதிமுக அரசு செலுத்தும் என்பதை உருவாக்கினோம். இதன் காரணமாக ஏழை மாணவர்களால் மருத்துவராக முடிந்தது. ஆனால் இன்று திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. டெல்டா விவசாயிகளின் நலன் கருதி மும்முனை மின்சாரத்தைத் தடையின்றி வழங்கி வந்தோம். ஆனால் இவர்களது ஆட்சியில் மின்சாரம் எப்போது வருகிறது போகிறது என்று தெரியவில்லை.

மூன்றாண்டுக் காலம் சிறுபான்மையினரைக் கண்டுகொள்ளாத முதலமைச்சர், அதிமுக பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்தவுடன் சிறுபான்மையின மக்கள் எங்களைத் தேடி வருகிறார்கள். இதைக்கண்ட முதலமைச்சர் உடனே சிறுபான்மையின தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளாகப் பேசாதவர் இப்போது பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்?. ஏ.பி.ஜே அப்துல் கலாம் குடியரசுத் தலைவராவதற்கு ஆதரவு அளித்து வாக்களித்தது அதிமுக தான். ஆனால் அவருக்கு எதிராக வாக்களித்தது திமுக.

இவர்களா சிறுபான்மையினருக்குப் பாதுகாவலர்கள். சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்தது அதிமுக தான். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது, இங்கே திமுக ஆட்சி நடக்கிறது. இருவரும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள். ஆனால், ஏன் இவர்களால் தண்ணீர் பெற்றுத் தர முடியவில்லை. நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படாத முதலமைச்சர் தான் இன்றைய முதலமைச்சர்.

அவர்கள் கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றுவது தான் அவர்களுடைய தலையாய கடமையாக உள்ளது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டுங்கள். தக்க பதிலடி கொடுங்கள். இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், கடன் வாங்குவதில் தான் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நம்பர் ஒன்(1) முதலமைச்சர் என்கின்றார். முதலமைச்சர் ஊழல் செய்வதில் தான் முதலிடம்" என்று திமுக ஆட்சி குறித்து கண்டனங்களைப் பதிவு செய்தார்.

எடப்பாடி பழனிசாமி

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை. தமிழகத்தில் அண்ணா திமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தமிழக கட்சிகளில் எந்தெந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, "கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையின் போது அதிகாரப்பூர்வ தகவல்கள் கொடுக்கப்படும்.

எங்களது கூட்டணி சிறப்பான கூட்டணியாக அமையும். கற்பனையான கேள்விகளுக்கு தற்போது பதில் சொல்ல இயலாது. அவ்வாறு கூட்டணி அமைந்த பிறகு, கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர், தொகுதி பகிர்வு குறித்து விவரங்கள் அனைத்து செய்தியாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, மேகதாது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு முன்னதாகவே அதிமுக சார்பில், மேகதாது விவகாரத்தில் எங்களின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் அதனைக் கண்டித்து விரிவாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தைப் பொறுத்தவரையில் பிரதான கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடனான முதற்கட்டப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, பாஜக, நாதக எனப் பல்வேறு கட்சிகள் அதன் வேட்பாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் என அதன் வேலைகளில் மும்மரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருக்கும் அதிமுக இன்னும் அதன் கூட்டணி குறித்து மௌனம் காத்து வருவது அரசியல் விமர்சகர்களைச் சிந்தனையில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 3 ஆயிரம் நபர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர். இப்படி கட்சியில் உறுப்பினர்கள் ஒருபுறம் அதிகரிக்கும் நிலையில், உட்கட்சியில் பெருந்தலைகளின் மோதல்கள் மற்றும் விலகல்கள் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் தொண்டர்கள் படை சூழ.. குதிரை வண்டியில் வலம் வந்த எடப்பாடி பழனிசாமி..!

Last Updated : Feb 18, 2024, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details