தமிழ்நாடு

tamil nadu

“திமுக - பாஜக ரகசிய உறவு.. ராகுல் காந்தியை வைத்தே நாணயம் வெளியிடலாம்”.. ஈபிஎஸ் கடும் சாடல்! - EPS about dmk alliance bjp

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 18, 2024, 5:40 PM IST

Edappadi Palaniswami: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில், மத்திய அமைச்சர் மற்றும் பாஜகவினர் கலந்து கொண்டிருப்பது திமுக - பாஜக இடையே உள்ள ரகசிய கூட்டணியை வெளிப்படுத்தி உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சியின் போது மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, ஸ்மார்ட் சிட்டி திட்டம், காந்திபுரம் மற்றும் ராமநாதபுரம் மேம்பாலங்கள் ஆகியவை அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

முக்கியமாக, உக்கடம் மேம்பாலம் அதிமுகவின் ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டு பணிகள் சுணக்கமடைந்தது. எஞ்சிய பணிகளை முடித்து வைத்து இப்போது முதலமைச்சர் அதனை திறந்து வைத்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக உக்கடம் மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் மேம்பாலப் பணிகள் நடைபெறுகிறது. கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம், காரமடை ஆகிய பகுதிகளில் அதிமுக ஆட்சியில் தான் பாலங்கள் கட்டப்பட்டன.

பில்லூர் மூன்றாம் கட்ட குடிநீர் திட்ட பணிகளுக்கு ரூ.750 கோடி அதிமுக ஆட்சியில் தான் ஒதுக்கப்பட்டது. கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் என பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, அவிநாசி - அத்திக்கடவு திட்டம் என்பது 60 ஆண்டு கால விவசாயிகளின் கனவாக இருந்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதிமுக ஆட்சியில் அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. 90 சதவீத பணிகள் முடிவடைந்த போது, கரோனா பரவல் காரணமாக தொய்வு ஏற்பட்டது. அதற்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

திமுக இந்த மூன்றாண்டுகளில் கிடப்பிலிருந்த 10 சதவீத பணிகளைத்தான் முடித்து தற்போது திறந்து வைத்துள்ளது. ஆறு மாதத்தில் செய்ய வேண்டிய பணிகளை மூன்று வருடங்களாகச் செய்துள்ளது. இதனால் கடந்த 2.5 வருடங்களாக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காமல் போனது. அதேபோல், விமான நிலைய விரிவாக்கம், வெள்ளலூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் புறவழிச்சாலை, பாலக்காடு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அவிநாசி சாலை ஆகியவை அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டங்கள் ஆகும்.

கோவையில் ஆறு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டன. அவிநாசி - அத்திக்கடவு இரண்டாம் கட்டத்திற்கான விரிவான திட்டம் அதிமுக ஆட்சியில் தயாரிக்கப்பட்டு தற்போது அது கைவிடப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, கோயம்புத்தூருக்கான மெட்ரோ திட்டம் அதிமுக ஆட்சியில் தான் திட்டமிடப்பட்டு, தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டைப் பற்றிய கவலைப்படாத அரசு திமுக தான். மேற்கு புறவழிச் சாலை திட்டத்தில் ஒரு பகுதிக்கு மட்டுமே டெண்டர் விடப்பட்டு, மீதமுள்ள பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது போன்ற பல பணிகளை, திட்டங்களை மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் அதிமுக வழங்கி உள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் மற்றும் பாஜகவினர் கலந்து கொண்டிருப்பது திமுக - பாஜக இடையே உள்ள ரகசியக் கூட்டணியை வெளிப்படுத்தி உள்ளது. திமுகவினரின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பாஜக தலைவர்கள் இதற்கு முன்பும் கலந்து கொண்டுள்ளனர்.

ராகுல் காந்தியை வைத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நாணயத்தை வெளியிடலாம் அல்லவா?
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவைக் கண்டித்து, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எதுவுமே பேசவில்லை. முல்லைப் பெரியாறு அணை வலிமையாக இருப்பதாக அதிமுக ஆட்சிக் காலத்தில் நிரூபிக்கப்பட்டு, அதற்காக மத்திய குழு அமைக்கப்பட்டு அணையின் வலிமை உறுதி செய்யப்பட்டது" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:சென்னையில் போக்குவரத்து மாற்றம்! எந்தப் பக்கம்லாம் போகத் தடை தெரியுமா? - Chennai Traffic Changes

ABOUT THE AUTHOR

...view details