சென்னை: கடன் வாங்குவதில் திமுக அரசு சாதனை படைத்துள்ளது என்று சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசை விமர்சித்ததற்கு நிதி அமைச்சர் கொடுத்த பதிலும், அதனை தொடர்ந்து நடந்த விவாதமும் காரசாரமாக இருந்தது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: கடன் கட்டுக்குள் இருக்கிறது. வாங்கிய கடனை திருப்பி செலுத்தக்கூடிய திறன் தமிழக அரசுக்கு உள்ளது.
எடப்பாடி பழனிசாமி: கடன் வாங்குவதில் திமுக அரசு சாதனை படைத்துள்ளது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: கடன் வாங்கக் கூடிய அளவிற்கு திறன் உள்ளதால் தான் நமக்கு கடன் கொடுக்கிறார்கள். திருப்பி செலுத்தவில்லை என்றால் கடன் கொடுக்க மறுத்துவிடுவார்கள். 7 லட்சம் கோடி வரை கடன் கொடுத்து வருகிறோம். 4 லட்சம் கோடி கடன் பெற்று இருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி: மூலதன செலவு அதிகரிக்காமல் வருவாய் செலவு அதிகரித்து வருவதால் மீண்டும் அதை எப்படி சரி செய்ய முடியும்? யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து சட்டபேரவைக்கு வந்ததற்கு, மலிவான அரசியல் என முதலமைச்சர் விமர்சனம் செய்துள்ளார். 1989 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது, அப்பொழுது அம்மாவிற்கு நடந்தது தான் மலிவான அரசியல். 2017 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த பொழுது சட்டப்பேரவை நடந்த நிகழ்வு அனைத்து தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. சட்டப்பேரவை தலைவரை திமுக உறுப்பினர்கள் கையை பிடித்து கீழே இழுத்து மலிவான அரசியலில் ஈடுபட்டனர். எங்கள் மேசையின் மீது ஏறி நடனமாடியது தான் மலிவான அரசியல்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது பிரதான கோரிக்கை. இதை வைத்து அரசியல் செய்யாமல் அவியலா செய்ய முடியும்? தினம் ஒரு அமைச்சர் இது குறித்து பேசி வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின்: நீங்கள் தினம் ஒரு அறிக்கையை விடுவதால் தான் எங்களுடைய அமைச்சர்கள் அதற்கான பதிலை சொல்லி வருகின்றனர். நீங்கள் தவறான செய்தியை மீண்டும் மீண்டும் சொல்வதால் தான் அமைச்சர்கள் அதற்கான பதிலை தெரிவித்து வருகின்றனர். எந்த காலத்திலும் நாங்கள் யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. இது எங்களுக்கு தேவையில்லாத ஒன்று. குற்றவாளிக்கு உரிய தண்டனை வாங்கி கொடுப்பதுதான் எங்களுடைய கடமை. மீண்டும் மீண்டும் இதை பேசுவதால் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை ஆரம்பிக்க வேண்டிய சூழல் வரும்.
சபாநாயகர்:உயர் நீதிமன்ற அறிவுரைகளின் படி மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளனர்.