சென்னை:இன்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் மரணமடைந்த விவகாரம் குறித்து, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டார். அப்போது, கேள்வி நேரம் என்பதால் விதிகளுக்கு மாறாக பேச அனுமதிக்க முடியாது என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
இருப்பினும், அதனை மீறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதாகைகளுடன் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். அதனை அடுத்து, பேரவைத் தலைவரின் உத்தரவின் அடிப்படையில் ஆர்.பி உதயகுமார், தளவாய் சுந்தரம், அக்ரி.எஸ் கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டனர்.
அதன் பின்னர், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். இதனிடையே, முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுப்பதாகவும், அவர் பதவி விலக வேண்டும் எனக் கூறி தனது 'X' சமூக வலைத்தள பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பகிர்ந்துள்ளார்.
அதில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விவாதம் நடத்தக்கோரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டபோது அவையில் இல்லாமல் ஒளிந்துகொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர் எங்களை வலுக்கட்டாயமாக அராஜகப் போக்குடன் வெளியேற்றிய பிறகு வந்து, தான் 'ஜனநாயக மாண்பு காப்பாளர்' என்று ஒரு நாடகமாடி, கள்ளச்சாராய மரணங்கள் குறித்த முற்றிலும் ஏற்கத்தகாத ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.