சென்னை: நாடாளுமன்ற மக்களவைக்கான 18வது தேர்தல், ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேலும், தேர்தலுக்கானப் பணிகளில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்களுடைய பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைத் தொடங்கியது முதலே அதிமுகவிற்கு தொடர்ந்து சிக்கல் நிலவிவந்தது. முன்னதாக, இனி பாஜகவுடன் கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுள் பெரும்பாலான கட்சிகள் தற்போது பாஜகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டுவருகின்றன. அந்தவகையில், கடந்த வாரம் வரை அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் இருந்த பாமக தற்போது பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது.