சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதோடு, விளவங்கோடு சட்டபேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல், கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி முடிவடைந்த நிலையில், நேற்று (மார்ச் 28) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மேலும், நாளை மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
அதன் பின்னர், இறுதி வேட்பாளர் பட்டியல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெளியிடப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. கொளுத்தும் வெயிலையும் பெருட்படுத்தாமல் மக்களைச் சந்தித்து வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் தொண்டர்கள் சிலர், தங்களது குழந்தைகளை அழைத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்திய தேர்தல் ஆணையமானது பிரச்சாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், அரசியல் கட்சிகள் சாார்பில் நடைபெறும் பிரச்சாார நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், முழக்கம் எழுப்புவது, சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுர விநியோம் போன்ற தேர்தல் சார்ந்த எந்தப் பணியிலும் குழந்தைைகளைை ஈடுபடுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.