தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் அமலுக்கு வந்ததது இ-பாஸ் நடைமுறை! - E pass implemented in Nilgiris

E-pass For Ooty: தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றான நீலகிரிக்கு இன்று முதல் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், இ-பாஸ் உள்ள வாகனங்களை மட்டுமே மாவட்ட எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர்.

E-Pass Procedure Implemented In Nilgiris
நீலகிரியில் அமலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறை (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 11:38 AM IST

நீலகிரி: கோடை விடுமுறை என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாலும், மக்கள் மலைப் பிரதேசங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றலா தளங்களுக்கு மக்களின் வருகை அதிகம் உள்ளது.

அந்த வகையில், நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதுமட்டும் அல்லாது, தங்கும் விடுதி மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாகச் சரியான நேரத்திற்கு வேலைக்குச் செல்ல முடியாமல் உள்ளூர் வாசிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, இன்று (மே 7) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயம் என நேற்றைய முன்தினம் (மே 5) அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இ-பாஸ் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.

அதன் அடிப்படையில், இன்று (மே 7) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. நீலகிரிக்குள் வரும் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்ட எல்லையான கல்லார் சோதனை சாவடியில் மாவட்ட வருவாய்த் துறையினர் இன்று காலை 6 மணி முதல் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இ-பாஸ் உள்ள வாகனங்களை மட்டுமே மாவட்ட எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர்.

இ-பாஸ் இல்லாமல் நீலகிரி மாவட்ட எல்லைக்குள் நுழைய முயலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இ-பாஸ் போட்டபிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, நீலகிரி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட 12 இடங்களில் வருவாய்த் துறை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வெளியூர்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்கள் tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details