சென்னை: அரசு அலுவலகங்கள் சிலவற்றில் முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவலின் பேரில், நேற்று (செப்.16) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து ஆறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத 11 லட்சத்து 93 ஆயிரத்து 310 ரூபாய் கைப்பற்றப்பட்டது.
இதன்படி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்க நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் முத்து அழகேசன் என்பவர் சார் பதிவாளராக கடந்த 9 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், முறைகேடாக இந்த சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு நடைபெற்று வருவதாகவும், இடைத்தரகர்களை வைத்து கூடுதலாக பணம் வசூலிப்பதாகவும், வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த தகவலின் பேரில், 11 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இந்த வேலூர் குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 43 ஆயிரத்து 620 ரூபாய் கைப்பற்றப்பட்டது.
அதேபோல், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் காட்டப்படாத 94 ஆயிரத்து 570 ரூபாய் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத வகையில் கைப்பற்றப்பட்டது.