தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலாற்றில் தடுப்பணை; இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்! - ஜெகன் மோகன் ரெட்டி

Duraimurugan: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 3:35 PM IST

சென்னை:பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு சார்பில் 22 அடியில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டு இருக்கிறது. இதற்காக, அம்மாநில அரசு ரூ.215 கோடி நிதி ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஆந்திர அரசின் திட்டத்தை, தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "1892ஆம் அன்றைய மதராஸ் - மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.

1892ஆம் ஆண்டின் மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் ஒப்பந்தத்தின்படி, கீழ்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.

இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும், இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்னையில் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில், ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையைக் கட்ட முயற்சிப்பது, 1892ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

மேலும், உச்ச நீதிமன்றம் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும், இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேஷபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையைக் கட்ட முயன்றபோது, இதனை எதிர்த்து தமிழக அரசு 2006ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கின் குறுக்கு விசாரணை 2018-இல் முடிவடைந்தது. இதன் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையே, ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து, மேலும் ஒரு சிவில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையைக் கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் (Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும்.

இச்செயல் இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாட்சிக்கு எதிரானது. ஆகையால், ஆந்திர அரசு இந்த அணை கட்டும் பிரச்சினை, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இம்மாதிரியான எந்த வித செயல்களையும் மேற்கொள்ளக்கூடாது என இருமாநிலங்களின் நலன் கருதிக் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சேலத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: மேலும் 2 சிறுவர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details