சென்னை:கடந்த சில மாதங்களாக தலைநகரான டெல்லியில் கடும் வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்லி சாலைகளில் செல்லமுடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், நேற்று டெல்லி உள்நாட்டு விமான நிலையத்தில் இருக்கும் டெர்மினல் ஒன்றின் மேற்கூரை உடைந்து கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் சிலர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் மேற்க்கூரைகளை சீரமைக்கும் பணி நடந்து வந்ததால், நேற்று 12-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதில் சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்பட இருந்த விமான சேவைகள் நேற்று பிற்பகல் முதல் இன்று (ஜூன் 29) மாலை வரை நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்படி, சென்னையிலிருந்து டெல்லி செல்லும் 7 விமானங்கள், டெல்லியில் இருந்து சென்னை வரவிருந்த 9 விமானங்கள் என மொத்தம் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.