கோயம்புத்தூர்: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என கொடிசியா மைதானத்தில் இன்று திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வந்துள்ளார். இந்நிலையில், கோவைக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். விழாவில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இது தவிர, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட மூத்த அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, ஆ.ராசா, சாமிநாதன் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர். இன்று நடைபெறும் முப்பெறும் விழாவுக்கு கோவை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்க தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு மண்டலம் திமுக வசம் தான் இருக்கிறது என்பதை பொதுமக்களுக்கு காட்டும் விதமாகவும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மக்களவைத் தொகுதி திமுக வசம் வந்திருக்கும் வெற்றியை பறைசாற்றும் விதமாகவும் இந்த முப்பெரும் விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, கோவை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை முதல் கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து விழாவிற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் அவினாசி சாலை நீலாம்பூர், சின்னியம்பாளையம், தொட்டிப்பாளையம் பிரிவு, சித்ரா சந்திப்பு, இஷ்கான் ரோடு வழியாகச் சென்று கொடிசியா மைதானத்திற்குச் செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
திருச்சி, கரூர், தாராபுரம், பல்லடம் மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து விழாவிற்கு வரக்கூடிய கட்சியினரின் வாகனங்கள் திருச்சி சாலையிலிருந்து, சூலூர் Y ரோடு சந்திப்பில் இருந்து சூலூர் குளம் முத்துக்கவுண்டன்புதூர் ரயில்வே பாலம் வழியாக அவினாசி சாலை சூலூர் பிரிவு அடைந்து நீலாம்பூர், சின்னியம்பாளையம், தொட்டிப்பாளையம் பிரிவு, சித்ரா சந்திப்பு மற்றும் இஷ்கான் ரோடு வழியாக சென்று கொடிசியா மைதானத்திற்கு செல்வதற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.