திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சியில் 2024 முதல் 2027ஆம் ஆண்டு வரையான மூன்று ஆண்டுகளுக்கு, குத்தகை இடங்களின் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி இன்று (பிப்.29) நடக்கவிருந்தது. இதில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை, புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிட அறைகளில் கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை உள்ளிட்ட எட்டு வகையான இடங்களுக்கு குத்தகை உரிமை ஏலம் விடப்பட இருந்தது.
இதனால் நகராட்சி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பேரிகாடுகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குத்தகை ஏலம் எடுக்க உரிமை கோரிய அனைவரும், நகராட்சி அலுவலக வாசலில் காத்திருந்தனர். அப்போது, திருப்பத்தூர் நகராட்சி கவுன்சிலர்கள் மட்டும் நகராட்சி அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஏலதாரர்கள், கவுன்சிலர்களை வெளியில் அனுப்புங்கள், அவர்களுக்கு ஏலம் நடக்கும் இடத்தில் என்ன வேலை எனக் கூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, திடீரென பேரிகாடின் மீது ஏறினர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்க நகரச் செயலாளர் பைரோஷ் கான், நகராட்சி ஆணையாளரைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.