புதுக்கோட்டை:புதுக்கோட்டை, அம்பேத்கர் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு திரைப்பட இயக்குநரும், பாஜக பிரமுகரமான கங்கை அமரன் வருகை தந்தார். அவரை அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வரவேற்று அம்பேத்கர் திருவுருவ சிலையை பரிசளித்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கடந்த காலங்களில் திரைப்படங்களில் நல்ல கதை இருந்தது. ஆனால் தற்போது வரும் திரைப்படங்களில் கதைக்கு இடமில்லை. அடி, உதை, குத்துக்கு தான் இடம்; மக்கள் அதை நோக்கி சென்றுவிட்டனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், தவறுகளை தட்டடிக்கேட்கும் நபராக அவர் மட்டுமே உள்ளார், அவர் முன்எடுத்துள்ள போராட்டங்கள் சரியானதே.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, மது கலாச்சாரம், போதை கலாச்சாரம் பெருகி வருகிறது. போதை கலாச்சாரத்தால் படப்பிடிப்புகள் நடத்தவே இடையூறாக உள்ளது. இந்த விவகாரங்களில் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் பட்டியலின சமூக மக்கள் இன்னும் தலை நிமிர்ந்து நடக்க முடியாத நிலைதான் உள்ளது, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையிலும்கூட பட்டியல் இனமக்களுக்கான முழு உரிமைகள் இன்னும் கிடைக்கவில்லை.