கோயம்புத்தூர்:நான்கு நாட்கள் பயணமாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேற்று காலை தமிழகம் வந்தடைந்தார். இந்நிலையில் இன்று அவர் நீலகிரி வந்துள்ள குன்னூர் வெலிங்க்டன் ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்த மரியாதை செலுத்தினார். அங்கு அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க ராணுவ மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது.
முன்னதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் இருந்து விமானம் வாயிலாக கோவை வந்தார். அங்கு அவரை அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வரவேற்றனர். பின் கடும்பனி காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் உதகைக்குச் சென்றார்.
மூன்று நாட்கள் உதகையில் உள்ள ராஜபவன் இல்லத்தில் தங்கும் அவர், இன்று வியாழக்கிழமை (நவம்பர் 28) காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் முப்படை அலுவலர்களிடையே உரையாற்றிய திரவுபதி முர்மு, போர் நினைவு சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
பெருமிதம் :அவர் தமது உரையில், "வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில் சைபர் குற்றங்கள், பயங்கரவாதம் போன்ற தேசத்தின் பாதுகாப்பு சவால்கள் உட்பட எந்தச் சூழலையும் சமாளிக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் தேசிய மற்றும் உலகளாவிய சூழல்கள் பற்றி. ஆழமான புரிதலை நாம் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார்.