கரூர்:கரூர் மாவட்டம் க.பரமத்தி சுற்றுவட்டாரப் பகுதியில், அரசு அனுமதியுடன் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள ஒரு சில கல்குவாரிகள் அரசு நிர்ணயம் செய்த அளவைவிடக் கூடுதலான அளவு பள்ளம் தோண்டி, பாறைகளை வெட்டி எடுத்து கட்டுமானத்துக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட் மணல்களாக மாற்றி விற்பனை செய்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
மேலும் கல்குவாரியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் க.பரமத்தி தாழையூத்துப்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழை காரணமாக, அப்பகுதியில் உள்ள 100 அடி ஆழமுள்ள கல்குவாரியில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதை எடுப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி காலை 10 மணி அளவில் சுதாகர் (41) என்ற ஓட்டுநர் 22000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரியில் எடுத்துக் கொண்டு கல்குவாரிக்கு சென்றுள்ளார். பின்னர் குவாரியில் தேங்கிய நீரை லாரியில் நிரப்பிக்கொண்டு மேலே வந்துள்ளார்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி 75 அடி உயரத்திலிருந்து பாறைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ஏற்பட்ட சத்தம் கேட்டு அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் பாறை குழி இடுக்கில் தலை மற்றும் உடல் பகுதிகள் நசுங்கி மயக்க நிலையில் சிக்கி இருந்த ஓட்டுநரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து க.பரமத்தி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநரின் மனைவி தாரணி புகார் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த லாரி ஓட்டுநர் நாகப்பட்டினம் ஆயங்குடி பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (41) என்பதும், இவர் அமமுக மாவட்டச் செயலாளர் தங்கவேல், உரிமையாளராக உள்ள கல்குவாரியில் 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கல்குவாரி உரிமையாளர்களின் ஒருவரான அமமுக மாவட்டச் செயலாளர் தங்கவேல் மற்றும் பங்குதாரர்களான சுப்பிரமணி, சக்திவேல், கந்தசாமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு அமைச்சரவை மாற்றமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!