தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“வரலாற்றை வெளிக்கொணர்ந்த ஒரு வரலாறு”.. கீழடி வை.பாலசுப்பிரமணியம் குறித்து மருத்துவர் சரவணன் நெகிழ்ச்சி! - Balasubramanian keezhadi excavation

Dr Saravanan: கீழடியை முதன் முதலாகக் கண்டறிந்து உலகுக்கு அறியத்தந்த ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியத்திற்கு அறிஞர் பெருமக்கள் சூழ பாராட்டு விழா நடத்துவேன் என அதிமுக மருத்துவர் அணியின் இணைச் செயலாளர் மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் சரவணன்
கீழடியைக் கண்டறிந்த ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியத்திற்கு பாராட்டு விழா நடத்துவேன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 3:42 PM IST

கீழடி வை.பாலசுப்பிரமணியம் குறித்து மருத்துவர் சரவணன்

மதுரை: கீழடியை முதன் முதலாகக் கண்டறிந்து தொல்லியல் துறைக்கு அறியத்தந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியம் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சிறப்புத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. இதனைக் கண்ட அதிமுக மருத்துவர் அணியின் இணைச் செயலாளர் மருத்துவர் சரவணன், மதுரை சிலைமானில் உள்ள ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியம் வீட்டிற்குச் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அதிமுக மருத்துவர் அணியின் இணைச் செயலாளர் மருத்துவர் சரவணன், ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “சமீபத்தில், கீழடியை உலகிற்கு முதன் முதலாகக் கண்டறிந்த ஆசிரியர் வை. பாலசுப்பிரமணியம் பேட்டியை, ஈடிவி பாரத் ஊடகத்தின் வாயிலாக அறிந்தேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரையின் அருகே, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி, உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது தமிழர் நாகரிக தொன்மையின் உச்சம்.

தமிழரின் பெருமை:கடந்த பத்து ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த கீழடி, 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், அகழாய்வுகளை தொடங்கியது. இதுவரை 9 கட்ட அகழாய்வுகளை நிறைவு செய்து 10வது கட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளது. அங்கு அமைந்துள்ள அருங்காட்சியகம் தமிழரின் பெருமையைப் பறைசாற்றுகிறது. ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியத்திற்கு தொல்லியல் உணர்வு குறித்து அதிக ஆர்வம் உள்ளது.

ஆசிரியரின் ஊக்கம்: மாணவர்களை வரலாற்றுத் தேடலோடு உருவாக்க வேண்டும் என்று நினைத்து அவர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளார். அதனால்தான் கீழடி போன்ற தொன்மையான இடத்தை நம்மால் அறிய முடிந்துள்ளது. அவர் தற்போது வசிக்கும் சிலைமான் பகுதி திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும். கடந்த முறை அப்பகுதியின் எம்எல்ஏ வாக நான் இருந்தேன்.

கீழடியின் தொடக்கம்:திரைப்படங்களில் நடிக்கின்ற கதாநாயகர்களை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கக்கூடிய வரலாற்று ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியம், கீழடியின் தொடக்கமாக இருந்திருக்கிறார் என்பது பெருமைக்குரியது. ஆனால், இந்த பதிவு வெளி உலகிற்கு வரவில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியம். இப்பகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராக இருந்தும், ஆசிரியரை அறியாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் எனக்குள் உள்ளது.

அக்கட்டுரையில் ஆசிரியர் கூறும்போது, “அகழ்வாராய்ச்சி மேற்கொள்கின்ற மொத்த இடத்தின் ஒரு பகுதியை தான் நாம் கண்டறிந்துள்ளோம். வீடு என்று ஒன்று இருந்தால் வாசல் என்று ஒன்று இருக்க வேண்டும். வாசல் என்று இருந்தால் நிறைய வீடுகள் இருக்கும் வகையில், தெரு இருந்திருக்க வேண்டும். அவையெல்லாம் இன்னும் கண்டறியப்படவில்லை. வணிக நகரமா அல்லது மக்கள் வாழக்கூடிய நகரமா” என ஆசிரியர் எழுப்பிய கேள்விதான், என்னை அவரது வீடு வரை இழுத்து வந்திருக்கிறது.

பாராட்டு விழா: கீழடி அகழாய்வு இன்னும் சரியான திசையில் செல்ல வேண்டும் என்ற அவரது ஆதங்கம் அந்த பேட்டியில் வெளிப்பட்டதை நான் உணர்ந்தேன். வெளியுலகிற்கு ஆசிரியர் பாலசுப்பிரமணியத்தை முழுமையாக நாம் கொண்டு சேர்க்கவில்லை. வரலாற்றை வெளிக்கொண்டு வந்த வரலாற்றை நாம் முதலில் வெளிக்கொணர வேண்டும்.

எனவே, கீழடியை முதன் முதலாகக் கண்டறிந்து உலகுக்கு அறியத்தந்த ஆசிரியர் வை.பாலசுப்பிரமணியத்திற்கு அறிஞர் பெருமக்கள் சூழ பாராட்டு விழா நடத்தி சிறப்பிக்க வேண்டும் என்பது எனது ஆவல். அரசு அவையில் பதிவு செய்யக்கூடிய வாய்ப்பு அமையுமானால் நிச்சயமாக அதையும் செய்வேன். அதனையே ஆசிரியருக்கு நான் தருகின்ற முக்கிய மரியாதையாக எண்ணிக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:கீழடி அகழாய்வு கடந்து வந்த பாதை.. வை.பாலசுப்பிரமணியம் வைத்த துவக்கப் புள்ளியின் கள நிலவரம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details