சென்னை:கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்த மருத்துவ சங்கம், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர்.
போராட்டம் வாபஸ்:இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, "பெருங்களத்தூர் விக்னேஷ் என்ற இளைஞர் மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியின் மூலம் 7 இடங்களில் தாக்கினார்.
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பாலாஜி அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது நலமாக உள்ளார். விக்னேஷ் தாயார் காஞ்சனா 6 மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தன்னுடைய தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என தாக்கியுள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவ சங்கத்தினர் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu) இந்த போக்கு கண்டனத்திற்குரியது. மருத்துவர்கள் வேண்டும் என்றே தவறு செய்யமாட்டார்கள். காவல்துறையினர் விக்னேஷை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருடன் வேறு யாராவது தொடர்பு உள்ளதா என்பதை தீவரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மருத்துவர் கத்திக்குத்து சம்பவம்: "இளைஞர் மீது உரிய நடவடிக்கை" - உதயநிதி ஸ்டாலின் உறுதி!
ஒரு சில மருத்துவர் சங்கம் வேலை புறக்கணிப்பு போராட்டம் அறிவித்திருந்தார்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.மருத்துவமனைக்கு கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும் என கேட்டுள்ளார்கள். அந்த மருத்துவமனை வெளியே Out Post அமைக்கப்படும். சிசிடிவி கேமராக்கள் அனைத்து இடங்களிலும் அமைக்கப்படும். போராடவுள்ளதாக அறிவித்தது இருந்த மருத்துவ சங்கங்கள் அதனை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளனர்" என தெரிவித்தார்.
இது குறித்து அரசு மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் அகிலன் ஆகியோர் கூறுகையில்," நடைபெற்ற தாக்குதல் அதிர்ச்சி அடையும் வகையில் உள்ளது.மருத்துவரை தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதில் தொடர்புள்ள மற்ற நபர்களையும் கைது செய்ய வேண்டும் என அமைச்சரிடம் கூறினோம்.
ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். தங்களுடைய கோரிக்கை அமைச்சர் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் தங்களுடைய காலவரையற்ற வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஆனால் நாளை 8 மணி முதல் 10 மணி வரை தர்ணா போராட்டம் நடத்தப்படும். அடுத்த 3 நாட்களுக்குள் தங்களுடைய கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் ஞாயிற்றுக்கிழமை அவசர செயற்குழு கூட்டம் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.