சென்னை:கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு இருப்பது குறித்து அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் இன்று நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களை இன்றே துவக்க வேண்டும் என்றும் மத்திய வருவாயில் மாநில அரசுக்கு 50% நிதி பகிர்வை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தமிழக கோரிக்கைகளை 16வது நிதிக்குழுவின் அறிக்கையில் முழுமையாக இடம் பெற்று அதனை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்றும் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மற்ற மொழிகளை புறந்தள்ளி இந்திக்கு முக்கியத்துவம் அளிப்பது, சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்காமல் இருக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், '' குறிப்பிட்ட காலத்திற்குள் கூட்டம் நடைபெற வேண்டும் என்பதால் இன்றைக்கு திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தை நடத்தி அதில் அரசியல் பிரச்சனைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.