சென்னை:தி.மு.க. செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.00 மணி அளவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "1957-இல் இருந்து 2024 வரை தேர்தல் களத்தில் நாம் எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை. எதிரில் நின்றவர்கள் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த இயக்கம் மட்டும் எப்போதும் உறுதியாக இருக்கிறது. ஏனென்றால் இது எப்போதும் மக்களுடன் இருக்கிறது.
செயற்குழுவில் ஸ்டாலின் பேச்சு (Credits - ETV Bharat Tamilnadu) சிறிது நாளாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஒரு வாக்கு சதவீத கணக்கை சொல்கிறார்.. 'காத்துல கணக்கு போட்டு கற்பனையில கோட்டை கட்டும் பழனிசாமி, 'கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வாக்கு சதவீதம் 1 விழுக்காடு உயர்ந்திருக்கிறது' என்று உளறிக் கொண்டிருக்கிறார்.
இல்லாததை இருப்பதுபோல ஊதிப்பெருக்கிக் காட்டுவது பழனிசாமிக்கு கைவந்த கலைதான். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 19.4 விழுக்காடு வாக்குகளை வாங்கியுள்ளது. இதுவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டும் வெறும் 20.4 விழுக்காடு வாக்குகளைத்தான் வாங்கியுள்ளது. 14 தொகுதிகளில் அதிகமாக போட்டியிட்ட அதிமுக நியாயமாக பார்த்தால் 32.98 விழுக்காடு வாக்குகளை 2024 தேர்தலில் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதைவிட 12.58 விழுக்காடு வாக்குகள் குறைவாதான் வாங்கியுள்ளது.
எளிமையாக சொன்னால், 2019-ல் சராசரியாக ஒரு தொகுதிக்கு 4.16 லட்சம் வாக்குகள் வாங்கிய அதிமுக 2024ல் வெறும் 2.61 லட்சம் வாக்குகள்தான் வாங்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 1.5 லட்சம் வாக்குகளை இழந்திருக்கிறது எடப்பாடி தலைமையிலான அதிமுக.
டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பா.ஜ.க.வை கண்டித்தாரா?
புரட்சியாளர் அம்பேத்கரை கொச்சைப்படுத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கீச்சுக்குரலிலாவது கத்துனாரா? பிரதமரை எதிர்த்துப் பேசுற துணிவு அவருக்கு இருக்கிறதா? தி.மு.க என்றால் மட்டும் சட்டமன்றத்திலேயும் கத்தி பேசுகிறார். வெளியிலேயும் கத்திப் பேசுகிறார்.
பழனிசாமி அவர்கள் என்னதான் கத்துனாலும் எப்படித்தான் கதறுனாலும் அவரோட துரோகங்களும் குற்றங்களும்தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும். நான் அவரை நோக்கி சவாலாவே கேட்குறேன்.
தி.மு.க என்றால் கொள்கையும் அதை நிறைவேத்துவதற்கான தியாகமும்தான் அடிப்படை. உங்களுடைய அரசியலுக்கு என்ன அடிப்படை? துரோகத்தைத் தவிர உங்களுக்கு பெருமையாக சொல்லிக்கொள்வதற்கு என்ன இருக்கிறது?
வரலாற்றுக் காலத்தில் சோழர்கள் ஆட்சியை எப்படி பொற்காலம் என்று சொல்கிறார்களோ அது போல மக்களாட்சி மலர்ந்த பிறகு, தி.மு.க.வின் ஆட்சிக்காலம்தான் தமிழ்நாட்டினுடைய பொற்காலம் என்று சொல்ல வேண்டும். தமிழ்நாட்டை வளர்த்து எடுத்தவர்கள் இந்த கருப்பு – சிவப்புக்காரர்கள் தான் என்று சொல்ல வேண்டும்.
கள்ளக் கூட்டணியாக வந்தாலும் சரி , நேரடியாக கூட்டணி அமைத்து வந்தாலும் சரி. தமிழ்நாட்டுக்கும் தமிழினத்துக்கும் இவர்கள் பேராபத்தானவர்கள் என்று மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
நாம் ஏன் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று சொல்லுகிற அதே நேரத்தில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது, ஏன் அவங்க வரக்கூடாது என்றும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
அ.தி.மு.க, பா.ஜ.க, புதுசு புதுசா முளைக்குற கட்சிகளுக்கு கிடைக்கின்ற , ஊடக சொகுசு நமக்கு ஒருபோதும் கிடைக்காது. இது இன்று நேற்றல்ல. 75 வருசமா நாம் எதிர்கொள்ளும் சவால். அந்த சவாலையும் சாதனையாக்கித்தான் இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது. நம்முடைய சொல்லாற்றல் - எழுத்தாற்றல் - மக்கள் நலன் ஆகியவற்றை நம்பித்தான் நாம் செயல்பட வேண்டும்.
நம்மை எதிர்ப்பவர்கள் எல்லாருமே நமக்கு எதிரியாக இருக்க தகுதியுடையவர்கள் இல்லை; தங்களுக்கு கவனம் கிடைக்கணும் என்று ஆர்வக் கோளாறில் நம்மை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள்.அவர்களுடைய கவனச் சிதறல்களுக்கு ஆளாகிவிடாதீர்கள். உண்மையான எதிரிகளை வீழ்த்த உங்களுடைய ஆற்றலை செலவிடுங்கள்.
ஏழாவது முறை ஆட்சி அமைக்கணும் என்பதுதான் நம்மோட இலக்கு! 200 தொகுதிகள்ல நம்மோட கூட்டணி வெல்லும்; 2026-இல் வெற்றி நமதுதான்! வெல்வோம் இருநூறு.. படைப்போம் வரலாறு!" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.