சென்னை:மறைந்த முரசொலி செல்வத்தின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:
முரசொலி செல்வம் அவர்கள் மறைந்துவிட்டார் என்பதை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை; ஏன் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பேசுவதால் அவர் திரும்பி வந்துவிடப் போகிறாரா? என்ற அந்த ஏக்கமும் என்னுடைய நெஞ்சத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது.
அவர் மறைவதற்கு முதல் நாள் மாலை என்னுடைய தங்கை செல்வியிடத்தில் பேசியிருக்கிறார். கலாநிதி மாறனிடத்தில் பேசியிருக்கிறார். அவருடைய மகள் எழிலரசியிடம் பேசியிருக்கிறார். என்னுடைய தம்பி தமிழரசு உடன் பேசியிருக்கிறார். ஏன் என்னிடத்திலும் பேசினார். “நாளை நான் சென்னைக்கு புறப்பட்டு வருகிறேன்” என்று சொன்னார்; வந்தார். உயிருடன் வரவில்லை. உடல் மட்டும்தான் வந்தது. நம்மையெல்லாம் ஒரு சோகச் சூழ்நிலையில் அவர் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டார்.
என்னை ஊக்கப்படுத்தியவர்: நம்முடைய தலைவர் கலைஞர் மறைவிற்குப் பிறகு நம்முடையப் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியரின் மறைவிற்குப் பிறகு, நம்முடைய முரசொலி செல்வம் அவர்களின் மறைவிற்குப் பிறகு எனது மனம் உடைந்து சுக்குநூறு ஆகியிருக்கிறது. அதிலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்பதை நான் எண்ணி எண்ணித் தவித்துக்கொண்டு இருக்கிறேன்.
எதற்காகச் சொல்கிறேன் என்றால், பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோதும், கோபாலபுரத்தில் இளைஞர் திமுக என்ற அமைப்பை தொடங்கியபோதும் எனக்குத் துணையாக இருந்தவர். எப்படி கூட்டம் நடத்த வேண்டும். எப்படி பேச்சாளரை அழைத்து வர வேண்டும். எப்படி நோட்டீஸ் போட வேண்டும். எப்படி போஸ்டர் அடிக்க வேண்டும். என்பதையெல்லாம் எனக்குக் கற்றுக்கொடுத்தவர். அதற்குப் பிறகு இளைஞர் அணியாக உருவாகியபோது அப்போதும் எனக்குத் துணை நின்று என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர்.
ஒரு மாநாடு என்று சொன்னால், கட்சியின் பெரிய கூட்டம் என்று சொன்னால், ஏதேனும் கழக நிகழ்ச்சி என்று சொன்னால், ஏதேனும் நிகழ்ச்சிக்குப் போகிறேன் என்றால் அதைக் கேள்விப்பட்டு முதல்நாளே என்னை அழைத்து ஒரு சீட்டை கொடுப்பார். என்ன பேசவேண்டும்; எப்படி பேசவேண்டும்; என்ன பாயிண்டில் பேசவேண்டும்; அதை எப்படி ஏற்ற இறக்கத்தோடு பேசவேண்டும் என்று எனக்குப் பயிற்சி அளித்தவர். அப்படிப்பட்டவர் இன்றைக்கு இல்லை என்று எண்ணும்போது நான் வேதனைப்படுகிறேன்.