சென்னை:நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளை உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்களவையில் பேசத் தொடங்கிய திமுக உறுப்பினர் பி.வில்சன், சுங்கச்சாவடிகள் ஏன் அகற்றப்பட வேண்டும் என்பதற்கான விளக்கங்களையும் அளித்தார். மேலும், அனைவரும் ஒன்றுபட்டு சுங்கச்சாவடிகளை நீக்குவதற்கான வழிகளைக் காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய எம்பி வில்சன், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை ஒழிப்பது தொடர்பாக மாநிலங்களவையில் நான் எழுப்பிய சிறப்பு கவன ஈர்ப்பு கேள்விக்கு பதிலளிக்கும் போது, அமைச்சருக்கு, உயர் அலுவலர்களால் போதிய ஆலோசனைகள் வழங்கப்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது என்றார்.
தொடர்ந்து, அமைச்சரின் எழுத்துப்பூர்வ பதிலில், 1997ஆம் ஆண்டின் முந்தைய தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் அறுபது கிலோமீட்டர் தூரம் குறித்து எந்த அளவுகோலும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
விதிகளை மீறுகிறதா ஒன்றிய அரசு?
இது 1997 விதிகளைக் குறித்த தவறான புரிதலைக் குறிக்கிறது. இந்த விதியானது உண்மையில் இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையில் 80 கி.மீ தூரத்தை குறிப்பிடுகிறது. மேலும், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, 60 கி.மீ சுற்றளவில் சுங்கச்சாவடிகள் அனுமதிக்கப்படாது என்று நாடாளுமன்றத்தில் தவறுதலாக அறிவித்து விட்டார் என்பதை இது குறிக்கிறதா? என வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது பரனூரில் செய்த முதலீட்டை விட ரூ.28.54 கோடி கூடுதல் லாபம் ஈட்டியுள்ளது என்பது உறுதிசெய்யப்பட்ட வகையில், விதிகளின்படி சுங்கக் கட்டணத்தைக் குறைக்கத் தவறிவிட்டது என்பதையும் அமைச்சர் ஒப்புக்கொள்கிறாரா?
அதுமட்டுமின்றி, வசூல் செய்யப்பட்ட அதிகப்படியான நிதியானது இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியில் டெபாசிட் செய்யப்படுகிறது என்பதும், அது தேசிய நெடுஞ்சாலைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், விரிவாக்குவதற்கும் ஒதுக்கப்படுகிறது என்ற விளக்கமும் மிகவும் கேள்விக்குரியது எனவும் வில்சன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்த நடைமுறையானது சுங்கச்சாவடி கட்டணம் குறித்து நிறுவப்பட்ட சட்டங்களை மீறுவதாகவும், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகவும், சாலை பயனர்களின் செலவில் ஒரு சிலருக்கு பயனளிப்பதாகவும் தெரிகிறது. மேலும், இந்த முதலீடுகள், செலவுகள் மற்றும் வசூல்களை மறுஆய்வு செய்ய சுயாதீன தணிக்கை ஆணையம் என்று எதுவும் இல்லை என்பது வருத்தமளிப்பதாகவும் கூறினார்.
கட்டண விதிகள் பெரும்பாலும் நெகிழ்வான விதிமுறைகளுடன் ஒப்பந்தக்காரர்களுக்கு சாதகமாக உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் பொது மக்கள் அத்தகைய அநீதியான சட்டத்தின் கீழ் நியாயமற்ற தொகையை செலுத்த நிர்பந்திக்கப்படுகிறார்கள். எனவே, இந்த அநியாயமான சுரண்டலுக்கும், கொள்ளைக்கும் அஞ்சி நாம் நம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் ஒரு நாள் வரலாம். இந்த நியாயமற்ற சுங்கச்சாவடி கட்டணங்களை எதிர்க்கவும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்றவும் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என எம்பி வில்சன் வலியுறுத்தினார்.