சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில், இந்திய மத்திய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை நடைபெற்ற விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை கலைவாணர் அரங்கில் நாணயத்தை வெளியிட்டார். இந்த நிலையில், கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்றும், திமுக - பாஜக கள்ள உறவு வைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு திமுக எம்பி ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், “என்ன ஆச்சு எடப்பாடி பழனிசாமிக்கு? முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங் ஏன் வருகிறார், ராகுல்காந்தியை ஏன் எதற்கும் அழைப்பதில்லை என்று அவர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார்.
இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது மத்திய அரசு என்பதால், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு? கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது.
இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும், இந்தியும் இருப்பது வழக்கம். எம்ஜிஆருக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும் கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை? கலைஞர் அவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான் 'தமிழ் வெல்லும்' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை எனப் புரியவில்லை.
எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில்கலைஞருக்கு நிறுவப்பட்ட சிலையை, பாஜக தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி. திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கலைஞர் சிலையைத் திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி என்பதையாவது அறிவாரா?