திருநெல்வேலி: பாளையங்கோட்டை ரயில் நிலைய நடைமேடையில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்து அதில் தமிழ் வாழ்க என எழுதி, இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு கல்வித் துறையின் நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காதபட்சத்தில், ரூ. 2 ஆயிரம் கோடியை வழங்க சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தமிழக அரசு இதை எதிர்க்கிறது” என்று அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டம் (ETV Bharat Tamil Nadu)
அவரது இந்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என அவர்கள் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். தொடர்ந்து இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்களும் தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருகின்றன.
முதலமைச்சர் கடிதம்:
இதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கூட்டாட்சித் தத்துவத்தையும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு "சமக்ர சிக்ஷா" திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகளை உடனடியாக வழங்க வேண்டும்” என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த 20ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். மேலும், மத்திய அரசுக்கு தமிழ்நாடு செலுத்தும் வரியை செலுத்தமாட்டோம் என அறிவிப்பதற்கு ஒரு நொடி போதும்" என எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடந்த 21 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதில், "தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்து செல்வதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளார். எனவே, கல்வியை அரசியலாக்கக் கூடாது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, மாணவர்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் எந்த மாநிலத்திலும் வேறு மொழியைத் திணிப்பதற்கே இடமே இல்லை" இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 23) திமுக பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் ராஜவர்மன் தலைமையில், திமுகவினர் திருநெல்வேலி பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அழித்தனர். தொடர்ந்து, அதில் 'தமிழ் வாழ்க' என எழுதினர். மேலும், மத்திய அரசு மற்றும் இந்தி திணிப்பை கண்டித்து, தமிழ் வாழ்க என முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, நெல்லை பாஸ்போட் அலுவலகத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்த நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு:இதேபோல், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளையும் கருப்பு மை கொண்டு திமுகவினர் அழித்தனர். இதனையடுத்து, இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட மூன்று மணி நேரத்தில், பெயர் பலகையில் மீண்டும் இந்தி எழுத்துக்களை ரயில்வே துறை அதிகாரிகள் எழுதினர். மேலும் இதுதொடர்பாக, கோவை தெற்கு மாவட்ட திமுக சட்ட திட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது ரயில்வே போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி நகர பாஜகவினர், ரயில்வே போலீசாரிடம் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து, நாளை சார் ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.