கோவை:கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் நேற்று (ஜுன் 15) முப்பெரும் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,மனித நேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் , கொ.ம.தே.க பொது செயலாளர் ஈஸ்வரன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமை கழக தலைவர் வேல்முருகன், மக்கள் நீதி மையம் கட்சி துணைத் தலைவர் மௌரியா உட்பட திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
விழாவில் பேசும் செல்வப்பெருந்தகை (Video Credits - ETV Bharat Tamilnadu) தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணபதி ராஜ்குமார், துரை வைகோ, செ.வெங்கடேசன், ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன், விஜய்வசந்த், செல்வகணபதி, கலாநிதி வீராசாமி ,தங்கதமிழ்செல்வன், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேடையில் வரிசையாக அமர்ந்திருந்தனர்.
பெருந்திரளாக கூடியிருந்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பேசும்போது, "திமுக தலைவர் ஸ்டாலின் - ராகுல் இடையிலான உறவு அடுத்த தலைமுறைக்கான உறவு. பெரியாருக்கும் காமராஜருக்கும் இடையில் இருந்த உறவை போன்றது" என்று பெருமித்துடன் தெரிவித்தார்.
"அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த கூட்டணியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. நாடாளுமன்ற தேர்தலின்போது காலையில் எந்தெந்த தொகுதியில் என்ன நிலவரம் என்பதை அக்கறையாக முதல்வர் கேட்டறிவார். அதுதான் வெற்றிக்கு வழிவகுத்தது.
தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கம் எப்போதும் திமுகவிற்கு உறுதுணையாக இருக்கும். இந்திய அளவில் காங்கிரஸ் தலைவர்கள் பெரும் அன்பை திமுக தலைவர் மீது வைத்து இருக்கின்றனர்,இது வெற்றிக் கூட்டணி? என பேசினார்.
மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி:மதிமுக எம்.பி. துரை வைகோ பேசும்போது, "தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் எங்களுக்கு வாய்ப்பு அளித்தது மட்டுமல்லாமல் ஒரு இமாலய வெற்றி பெறுவதற்கு முதல் காரணமாக விளங்கும் ஸ்டாலின் அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோ மற்றும் நிர்வாகிகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட அரசியல் என்றால் சமூகநீதி; திராவிட அரசியல் என்றால் சமத்துவம்; திராவிட அரசியல் என்றால் பெண்கள் உரிமை; ஆக மொத்தம் திராவிட அரசியல் என்றால் சமுதாய முன்னேற்றம். பெரியார் ஊட்டி வளர்த்த அந்த திராவிட அரசியலை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு மேலாக கட்டி டாக்டர் கலைஞருக்கு இந்த மகத்தான வெற்றியை காணிக்கை ஆக்குகின்றேன்.
மக்களை பிளவுபடுத்தும் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தியா கூட்டணிக்கு ஒரு இமாலய வெற்றியை பெற்றுத்தந்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோடான கோடி நன்றியை நான் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
நாட்டை மீட்ட இருவர்:திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசும்போது, "செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என சொல்லி 40/40 வெற்றியை பெற்றுக் கொடுத்த சிற்பி தான் முதல்வர் முக ஸ்டாலின். 'திமுக தொண்டர்கள் சோர்வடையாதவர்கள்' என கருணாநிதி சொல்லியுள்ளார். இந்தியா கூட்டணி தலைவர்கள் தான் மருத்துவர்கள். நாட்டை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீட்டு கொண்டு வந்தவர்கள் இருவர், ஒருவர் ஸ்டாலின்; மற்றொருவர் ராகுல் காந்தி. 2026 சட்டமன்றத் தேர்தலில் இக்கூட்டணிக்கு தராளமாக 200 இடங்கள் கிடைக்கும்.கொள்கைரீதியாக வெற்றி பெற்றுள்ளோம். திராவிடம் வெல்லும், இது பெரியார் மண். தாமரை என்றும் இங்கு மலராது" என பேசினார்.