சென்னை:நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க ஸ்டாலின் பேசுகையில், “நம்முடைய கூட்டணிக்கட்சியினர் தோளோடு தோளாக நீண்டகாலமாக கொள்கை உணர்வுடன் பயணிக்கிறார்கள். அதனால் நட்புணர்வோடு கலந்து தொகுதிப் பங்கீடு செய்திருக்கிறோம். சில தொகுதிகளைப் பெற்று சில தொகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம். பலம் வாய்ந்த பெரிய கூட்டணியில் இது இயல்பானது.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம். தமிழ்நாட்டோட நலன் முக்கியம். நாட்டோட எதிர்காலம்தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும். மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் அவரவர் மாவட்டங்களைச் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குகளைக் கூடுதலாக பெற்று தரும் பொறுப்பு சாரும்.
ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு குறைந்தாலும் அதற்கு அந்த மாவட்டச் செயலாளரும், பொறுப்பு அமைச்சரும்தான் பொறுப்பு. ️தொகுதி மட்டுமில்லாமல் தேர்தலுக்குப் பிறகு, ஒன்றிய – நகரம் - பகுதி- பேரூர் அளவில் வாக்கு வித்தியாசத்தின் பட்டியலை எடுக்கப் போகிறேன்.
எந்த இடத்தில் வாக்குக் குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை இப்பவே சொல்லி விடுறேன். இதை ரொம்ப கண்டிப்போடவும் சொல்கிறேன். எல்லா தொகுதியிலயும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும்.