கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் கடலூர்:கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் ஆவார். இந்த நிலையில், கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் மச்சானா? பச்சானா? என்ற கேள்வியுடன் களம் கண்டு வருகிறது.
பண்ருட்டியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் இன்று பேசிய காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் சங்கடமான சூழ்நிலையில் இந்த அரசியல் இருந்து வருவதாகவும் என்னுடைய மாமனாக அன்புமணி உள்ளார் என்று தெரிவித்தவர்.
பாண்டவர் அணியே வெல்லும்: உறவுகள் வேறு அரசியல் வேறு என்று கூறியதுடன், மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடைபெற்ற போர் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடந்த போர், இதில் தர்மம் வெற்றி பெற்றது; பாண்டவர் அணி வெற்றி பெற்றது. நாங்கள் பாண்டவர் அணி என்று தெரிவித்தார்.
பாமகவிற்கு கொள்கைகள் இல்லை என்று கூறிய அவர், இவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனியாக நின்றிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருக்கலாம் எனக் கூறினார். மேலும், 'போராட்டம் என்று வந்துவிட்டால் எதிரில் நிற்பது மாமனாக இருந்தாலும், மச்சனாக இருந்தாலும் குறி தவறாது.. சுட வேண்டும் என்று சொன்னது யார்? இவர்கள் சொல்கிறார்கள் நான் செய்கின்றேன்' என அவர் தெரிவித்தார்.
என்எல்சிக்கு எதிராக போராடிய பாமக:6 மாதத்திற்கு முன்பு என்எல்சிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது, இந்த என்எல்சி நிறுவனம் யாருடைய கையில் உள்ளது. அவர்களிடமே தற்போது கூட்டணி வைத்துவிட்டு, எப்படி சென்று அங்கு ஓட்டு கேட்பீர்கள். அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? எனக் கேள்வியெழுப்பினார்.
சரியான பாதையில் செல்லும் திருமாவளவன்: மேலும் கூட்டணி மூலம் உங்களுக்கு ராஜ்யசபா பதவி கிடைத்தது. ஆனால், தற்போது கூட்டணி இல்லை எனக் கூறி கூட்டணியை விட்டு வெளியில் வந்தவுடன் எம்பி பதவியை தூக்கி எறிய வேண்டாமா? விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதிமுக கூட்டணியில் பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியேவே, தான் அந்த கூட்டணியை விட்டு வெளியில் வந்தவுடன் ராஜினாமா செய்தார்! இதுதான் சரியான பாதை என்று அவர் தெரிவித்தார்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் மாமன் மச்சான் சண்டை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. கூட்டத்தில் தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் விருதாச்சலம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கடலூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் மணிரத்தினம் மாவட்ட தலைவர் திலகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானார் பங்கேற்றனர்.
குறிப்பாக, இதே கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக இயக்குனர் தங்கர் பச்சான் அக்கட்சியின் 'மாம்பழம்' சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'திமுகவிற்கு ஓட்டுப் போடுவதும்..குரங்குக்கு கோர்ட்டு போடுவதும் ஒன்றுதான்' - திமுகவை விளாசிய விந்தியா - Actress Vindhya Election Campaign