சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில், 'விஷால் பிலிம் பேக்டரி" பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது.
அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயைத் தான் செலுத்தி உள்ளதாக விஷால் கூறியுள்ளார். மேலும் லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கும் வாய்ப்பிருப்பதால், தான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்' என விஷால் தமது மனுவில் தெரிவித்திருந்தார்.