சென்னை:நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கெடுத்திருந்த திருவள்ளூரைச் சேர்ந்த 97 வயது சுதந்திர போராட்ட வீரர் வேலு என்பவருக்கு, 2021ம் ஆண்டு முதல் சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
ஆனால், ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்த 1987ம் ஆண்டு முதல் கணக்கிட்டு, தனக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2008ம் ஆண்டு முதல் 2021 வரைக்கான ஓய்வூதிய பாக்கியை வழங்கும்படி, தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.
கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என சுதந்திர போராட்ட வீரர் வேலு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், "உத்தரவை அமல்படுத்த 10 நாட்கள் அவகாசம் வழங்கியும் ஓய்வூதிய பாக்கி தொகை வழங்கப்படாததால், பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்".