தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியா டூ புருனே! இனி நேரடி விமான சேவை; அதுவும் சென்னையில் இருந்து மட்டும்

சென்னையிலிருந்து புருனே நாட்டிற்கு செல்ல ராயல் புருனே ஏர்லைன்ஸ் நிறுவனம் நவ.5ஆம் தேதி முதல் நேரடி விமான சேவையைத் தொடங்கியுள்ளது. இது தான் இந்தியா- புருனே செல்லும் முதல் நேரடி விமான சேவையாகும்.

DIRECT FLIGHT SERVICE  FROM CHENNAI TO BRUNEI ROYAL BRUNEI AIRLINES BEGAN article thumbnail
ராயல் புருனே ஏர்லைன்ஸ் மேலாளர் அசோக் குமார், ராயல் புருனே ஏர்லைன்ஸ் விமானம் கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 11:29 AM IST

சென்னை:இந்தியாவில் இருந்து புருனே நாட்டிற்கு நேரடி விமான சேவை இல்லாததால், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, பாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று இணைப்பு விமான மூலம் புருனே நாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை இருந்துவந்தது. அதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் புருனே பயணத்தின் போது புருனே நாட்டின் தலைநகரான பந்தர் செரி பேகவானுக்கும் தமிழ்நாட்டின் சென்னைக்கும் இடையே நேரடி விமான சேவைப் போக்குவரத்து தொடங்குவதற்க்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டார். அதன் அடிப்படையில் தற்போது இந்த விமான சேவை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமான சேவையை ராயல் புருனே ஏர்லைன்ஸ் நிறுவனம் நவம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள நிலையில் சென்னையிலிருந்து வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி என மூன்று தினங்களுக்கு இயக்கப்பட உள்ளது.

நவ.5ஆம் தேதி புருனே நாட்டில் இருந்து இரவு 10.50 மணியளவில் புறப்பட்ட பிரூனே ஏர்லைன்ஸின் A320 நியோ விமானம் முதன்முறையாக நவ.6 ஆம் தேதி சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அதனை வரவேற்கும் விதமாக விமானத்தின் இரு பக்கங்களிலும் நீரை பீச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராயல் புருனே ஏர்லைன்ஸ் மேலாளர் அசோக் குமார் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இதனை தொடர்ந்து இந்த விமான சேவை குறித்து சென்னை தனியார் ஹோட்டலில் புருனேவின் இந்தியாவிற்கான ஹை கமிஷனர், டத்தோ படுகா அலாய்ஹூதீன் முகமது தாஹா, ராயல் புருனே ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சபீரின் அப்துல் ஹமீத் , தலைமை வணிக அதிகாரி ஜோஸ்வா, புரூனே நாட்டின் சுற்றுலா அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் செய்தியாளர் சந்தித்தனர்.

இதையும் படிங்க:கந்த சஷ்டி: திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு!

இதில் பேசிய ராயல் புருனே ஏர்லைன்ஸ் இன் தலைமை செயல் அலுவலர் சபீரின் அப்துல் ஹமீது கூறுகையில், “இந்த விமான சேவை இரு நாடுகளுக்கு இடையிலான பாலமாக இருக்கும். சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்திற்கான வாய்ப்பாக அமையும். சென்னையில் இருந்து புரூனே நாட்டின் தாருஸ்சலாம் சுற்றுலா நகருக்கு செல்ல நினைக்கும் மக்களுக்கு இந்த விமான சேவை பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் மெல்போர்ன், ஹாங்காங், ஜகர்த்தா, சிங்கப்பூர்,சியோல், மணிலா மற்றும் தைப்பே ஆகிய நாடுகளுக்கு சென்னையில் இருந்து எளிதாக நேரடி விமான மூலம் செல்லலாம்” என்றார்.

இதையடுத்து பேசிய ராயல் புரூனே ஏர்லைன்ஸ் மேலாளர் அசோக் குமார் கூறுகையில், “புருனேவில் தமிழ் மக்கள் 14 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மொத்த மக்கள் தொகையில் 3% மக்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். முன்பு சென்னையில் இருந்து இணைப்பு விமானங்கள் மூலம் 9 மணி நேரம் வரை புரூனே செல்வதற்கு ஆகும் இப்போது 5 மணி நேர 20 நிமிட நேரமாக குறைந்துள்ளது.

ஆண்டிற்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இணைப்பு விமானங்கள் மூலம் புருனே நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுகின்றனர். தற்போது அவர்கள் இணைப்பு விமானம் இல்லாமல் நேரடியாக விமான சேவையை பயன்படுத்துவது மூலம் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறோம். மக்கள் வருகை அதிகரிக்கும் போது வாரம் முழுவதும் இந்த விமான சேவை செயல்படுத்தவும் வாய்ப்புள்ளது” என தெரிவித்தார். ராயல் புரூனே ஏர்லைன்ஸ் தொடங்கி தற்போது 50வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details