தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சிரேயா' ஆன மெக்கானிக்கல் இன்ஜினியர்.. போலி ஐடி-யில் உருகி உருகி பேசி ஒன்றரை லட்சத்தை பறிகொடுத்த ஓட்டுநர்!

திருவாரூரில் முகநூலில் பெண் போல் பழகி டிரைவரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட டிப்ளமோ இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.

கைதான பிரசாந்த் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்
கைதான பிரசாந்த் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

திருவாரூர்:மாவட்டம், மன்னார்குடி, கண்ணாரபேட்டை தெற்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவருக்கு வயது 36. லாரி டிரைவரான இவருக்கு முகநூல் முலம் சிரேயா என்கிற பெயரில் அறிமுகமாகன நபர், தான் பெண் என்று கூறி தொடர்ந்து அவரிடம் சாட்டிங் செய்துள்ளார். அப்போது ஆசை வார்த்தைகளை கூறியும், ஆபாசத்தை தூண்டும் வகையிலும் பேசி வந்துள்ளார். இதனால் மணிமாறன், சிரேயா என்கிற முகநூல் பக்கத்தில் இருப்பவர் பெண் தான் என நினைத்து, தனது குடும்ப கஷ்டங்களையும் அவரிடம் பகிர்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என சிரேயா கூறியதை நம்பி அவர் சொல்லும் 3 செல்போன் எண்களுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பல தவனையாக அனுப்பியுள்ளார். ஒரு நாள் சிரேயா பேசுவதில் சந்தேகம் அடைந்த மணிமாறன், அவர் பேசிய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது செல்போனை எடுத்தவர் எனக்கு எந்த பெண்ணும் கிடையாது என கூறியதால் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்துள்ளது.

இது குறித்து மணிமாறன் திருவாரூர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி முகநூலில் மோசடி செய்த நபரை தேடி வந்தனர். இதில் செல்போன் எண்கள் மற்றும் பணம் சென்ற வங்கி கணக்குகளை ஆராய்ந்து பார்த்ததில், மோசடியில் ஈடுபட்டவர் அரியலூர் மாவட்டம், பெரியகிருஷ்ணாபுரம், ரெட்டிதத்தூர் காமராஜர் தெருவைச் சேர்ந்த பிரசாந்த் குமார் (வயது 26) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அரியலுர் சென்று பிரசாந்த் குமாரை கைது செய்தனர்.

இதையும் படிங்க:மண்ணுக்குள் 88 சவரன்.. கொள்ளை பணத்தில் 4 கோடிக்கு நூற்பாலை.. தேனி கும்பல் சிக்கியது எப்படி?

அவரிடம் நடத்திய விசாரணையில், பிரசாந்த் குமார் டிப்ளமோவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், டிரைவர் மணிமாறனை ஏமாற்றி 1 லட்சத்து 60 ஆயிரம் பணம் பறித்ததும் தெரிய வந்தது.

மேலும், இதே பாணியில் பல நபர்களிடம் செல்போனில் பெண்களை போல் பேசி ஆசை வார்த்தைகளை கூறி நம்ப வைத்து ஏமாற்றி அவர்களிடம் ஆன்லைன் மூலம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், ஆன்லைன் வழியே ஆள் மாறாட்டம் செய்வது, பிறரை மோசடியாக நம்ப வைத்து பணம் பறிப்பது, ஏமாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details