பெயர் பலகை இல்லாத பேருந்தை போல பிரதமர் வேட்பாளர் யார் என தெரியாமல் இருக்கிறார் இபிஎஸ் தேனி:இலையை ஆடு மேய்ந்து போய்விட்டது, குக்கர் அருகே நின்ற போது குக்கரில் சோறு இல்லாமல் விசில் அடித்தது, இன்று சூரியனை நோக்கித் திரும்பியுள்ளார் வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், என பழனிசெட்டிபட்டியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் அறிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் போட்டியிடும் நிலையில், அவரை ஆதரித்து, திண்டுக்கல் ஐ.லியோனி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசுகையில், “10 ஆண்டுகளாக இந்தியாவை ஏமாற்றிக்கொண்டிருப்பவர் மோடி. 2014 ல் ஈரோட்டில் நான் ஒரு ஜவுளி பூங்காவை அமைப்பேன் என்றார். ஆனால் ஒன்றையும் காணவில்லை. தமிழகத்திற்குப் பிரதமர் அவர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை, ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
தமிழ்நாட்டு மக்களுக்காக ஒரு முறையாவது போராட்டம் செய்து சிறைக்குச் சென்றிருப்பாரா அண்ணாமலை, ஆனால் திமுக தலைவர்கள் மக்களுக்காகப் போராடி வருடக் கணக்கில் சிறைக்குச் சென்றவர்கள். பெயர்ப் பலகை இல்லாத பேருந்தை ஓட்டுவது போல் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமலே இருக்கிறார்.
எங்கள் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இலைக் கட்சியில் (அதிமுக) இருந்தபோது இலையை ஆடு மேய்ந்து போய்விட்டது, குக்கர் அருகே நின்ற போது குக்கரில் சோறு இல்லாமல் விசில் அடித்தது, இன்று சூரியனை நோக்கித் திரும்பி வந்துள்ளார்.
ஒற்றை விரலால் ஓங்கி அடிப்பேன் எனக் கூறும் எடப்பாடி பழனிச்சாமியை ஓரங்கட்ட வேண்டும், மக்களை மதத்தாலும் ஜாதியாலும் பிரிக்கின்ற மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டி, மதச்சார்பற்ற தலைவரைப் பிரதமராக்க வேண்டும். திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும், கொள்கை இல்லாதவர்கள் என்ன நிலைமைக்கு ஆளாவார்கள் என்பதற்கு ஓ.பன்னீர்செல்வத்தைத் தவிர வேறு யாரும் உதாரணம் இல்லை”, என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: கனடாவில் காலை உணவுத் திட்டம் அறிமுகம்.. பெருமிதம் தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ! - Canada Breakfast Scheme