சென்னை:வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை மாவட்டங்களில் லட்சகணக்கான மக்கள் வேதனையில் தவிக்கின்றனர். சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் ஒரே நாள் இரவில் லட்சகணக்கான கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றின் கரையின் ஒரம் வசித்த நான்கு மாவட்ட மக்கள் இதுவரை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பொருட்சேதத்தை எதிர்கொண்டுள்ளனர். ஆற்றின் கரையோரம் இருந்த விவசாயிகளின் பல்லாயிரகணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் முற்றிலும் சேதம் அடந்துள்ளன.
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இவ்வளவு பெரிய இயற்கை பேரிடரில் இருந்து முன்கூட்டியே மக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. உண்மையில் என்ன நடந்தது என்பதை அலசுகிறது இந்த கட்டுரை
தண்ணீர் திறந்து விடப்பட்டது அப்பாவி மக்களுக்கு தெரியவில்லை:பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீரை திறந்து விட்டு மக்களின் இன்னல்களை பல மடங்கு பெருக்கியிருக்கிறது. நள்ளிரவு 1.30 மணிக்கு சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், அடுத்த சில மணி நேரங்களில் 4 மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ,விழுப்புரம் ,கடலூர் மாவட்டங்களில் பல நூறு கிராமங்களையும் சுற்றி வளைத்த வெள்ளம், அங்குள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்த விவரம் அப்பாவி மக்களுக்கு தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பிறகு தான் மக்களுக்கு விவரமே தெரிந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற எண்ணத்தில் அவர்கள் அனைவரும் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்திருக்கிறார்கள்," என்று கூறியிருக்கிறார்.
பொறியாளர்கள் முன் எச்சரிக்கையாக இல்லை:மருத்துவர் ராமதாசின் அறிக்கையில், "சாத்தனூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை பகலிலேயே அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அணை நிரம்பி விடும் என்பது பொறியாளர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். தென்பெண்ணை ஆறு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீரை மட்டும் தான் தாங்கும்; அதற்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும் என்பதும் அணையின் பொறியாளர்களுக்கு தெரிந்தது தான். அதன்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலிருந்தே சாத்தனூர் அணையிலிருந்து கணிசமான அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டிருந்தால், இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது," என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஐந்து முறை எச்சரிக்கைகள் விடப்பட்டது:எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு நீர்வளத்துற அமைச்சர் துரைமுருகன் மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , "ஃபெஞ்சல் புயலால் நீர்பிடிப்பு பகுதியில் பெரும் மழை பொழிவால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளவான 119 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர், தென் பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
விதிமுறைப்படி 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன. தென்பெண்ணையாற்றின் மேல் உள்ள கிருஷ்ணகிரி அணை, நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள கல்வராயன்மலையில் பெய்த கனமழை, பாம்பாறு, கல்லாறு, வாணியாறு ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணங்களால் டிசம்பர் ஒன்றாம் தேதி முற்பகல் 8.00 மணியளவில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் முற்பகல் 11.50 மணியளவில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன. இதனை தொடர்ந்து அன்று மாலை. 6.00 மணியளவில் 19500 கன அடியிலிருந்து 7.00 மணியளவில் 25600 கன அடி, 8.00 மணியளவில் 31555 கன அடி 9.00 மணியளவில் 32000 கன அடி, 10.00 மணியளவில் 32000 கன அடி நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது. சாத்தனூர் அணை பகுதிகளில் அதி தீவிர கனமழை பெய்து கொண்டு இருந்ததால் பிற்பகல் 10.00 மணியளவில் நான்காம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
பிற்பகல் 11.00 மணியளவில் 32000 கன அடி, டிசம்பர் 02 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணியளவில் 63000 கன அடி, அதிகாலை 1.00 மணியளவில் 106000 கன அடி நீர்வரத்து வந்த வண்ணம் இருந்தது. எனவே, அதே அளவு தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்தது. 02ஆம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் ஐந்தாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. மேலும் 02ஆம் தேதி அதிகாலை 2.00 மணியளவில் 130000 கன அடியாக நீர்வரத்திலிருந்து அதிகபட்சமாக அதிகாலை 3.00 மணியளவில் 168000 கன அடிக்கு உயர்ந்ததால், அணைக்கு வந்த வெள்ள நீர், அணையின் பாதுகாப்பினை கருதி படிப்படியாக உயர்த்தி அதிகாலை 3.00 மணியிலிருந்து 8.00 மணி வரை விநாடிக்கு 168000 கன அடி தண்ணீர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டது.
பெரு மழையை தொடர்ந்து பெய்ததை அடுத்து நீர் வரத்து அதிகமானதால் 5-வது வெள்ள அபாய எச்சரிக்கை டிசம்பர் 2-ம் தேதி முற்பகல் 2.45 மணிக்கு விடப்பட்டு வினாடிக்கு 1,80,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அதிகப்படியான மழையின் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் பொய்யான தகவலைப் பரப்புகிறார்கள்,"என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
எப்படி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன? ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளரிடம் பேசிய நீர்வளத்துறை பொறியாளர் ஒருவர், "சாத்தனூர் அணையின் உதவி செயற்பொறியாளரிடம் இருந்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு ஐந்து வெள்ள அபாய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கைகள் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் மின்னஞ்சல்களுக்கும், வாட்ஸ் ஆப் எண்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது," என்று கூறினார்.
சாத்தனூர் அணையில் இருந்துபெறப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர்கள், தாலுகா அளவில் அதனை பார்வர்டு செய்தனர். தாலுகா அளவில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு அந்தந்தப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அந்த எச்சரிக்கைகள் பார்வர்டு செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் தண்டோரா மூலம் கிராமங்களில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் கூறுகின்றனர்.
அணையில் எவ்வளவு தண்ணீர் இருந்தது?ஃபெஞ்சல் புயல் அச்சுறுத்தல் நிலவுகிறது என்பது குறித்து நவம்பர் இறுதியிலேயே இந்திய வானிலை மையம் எச்சரிக்கை வழங்கி விட்டது. சாத்தனூர் அணையில் நவம்பர் 25ஆம் தேதி 117.75 அடி தண்ணீர் இருப்பு இருந்ததாக தமிழக அரசின் http://tnagriculture.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் ஒன்றாம் தேதி 117.95 அடி தண்ணீர் இருப்பு இருந்தது என்றும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நவம்பர் 30ஆம் தேதி 550 கன அடி தண்ணீரும், டிசம்பர் ஒன்றாம் தேதி 1020 கன அடி தண்ணீரும் மட்டுமே திறந்து விடப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அணையில் இருந்து படிப்படியாக ஏன் தண்ணீரை திறக்கவில்லை? இந்த நிலையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை இங்கு கவனிக்க தக்கதாக இருக்கிறது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து மத்திய நீர் ஆணையம் கணித்து மாநில அரசுக்கு உரிய எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது. அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 117.60 அடி என இருந்திருக்கிறது. டிசம்பர் ஒன்றாம் தேதி இரவு 7 மணிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்று உதவி செயற்பொறியாளர் ராஜாராமன் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அதே நாள் இரவு 12.45 மணிக்கு விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீரும், அதன் பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் , டிசம்பர் 2ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு 1.80 லட்சம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுவதாகவும் ஊடகங்களுக்கு அதிகாலை 4.15 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது," என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.
நவம்பர் 29ஆம் தேதி 117.60 கன அடி தண்ணீர் இருந்தது. 2ஆம் தேதி அதிகாலை 118.95 கன அடியாக தண்ணீர் இருப்பு இருந்தது. மத்திய மத்திய நீர் ஆணையம் எச்சரித்த 29ஆம் தேதியும், அதற்கு அடுத்த நாளும் அணையில் இருந்து தண்ணீர் படிப்படியாக திறந்து விட்டிருந்தால், டிசம்பர் ஒன்றாம் தேதி இரவும், டிசம்பர் 2ஆம் தேதி அதிகாலையிலும் அதிக அளவு தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது," என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு குறிப்பிடுகிறது.