தருமபுரி:நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பல மாவட்டங்களிலும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினரிடையே போஸ்டர் போட்டி நிலவி வருகிறது. சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் “எம்.பியை காணவில்லை. கண்டா வர சொல்லுங்க” என்ற எதிர்க்கட்சியின் போஸ்டர் மிகவும் பிரபலமானது.
இது மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியதையடுத்து எம்.பிக்களும் போஸ்டர்களுக்கு பதிலளித்திருந்தனர். அந்த வகையில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தருமபுரி, மேட்டூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் கண்டா வர சொல்லுங்க போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாரின் ஆதரவாளர்கள் கண்டா வரச் சொல்லுங்க? எனக் குறிப்பிட்டு “மக்களுக்கான நிதியை கையோடு வாங்கித் தந்தாருங்க” என நகர் முழுவதும் பதில் போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
மேலும் அந்த போஸ்டரில் நிதி குறித்த விபரங்களையும் பட்டியலிட்டிருந்தனர். ஒகேனக்கல் காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்திற்கு 7890 கோடி, ஜிட்டாண்டஹள்ளி தருமபுரி நான்கு வழிச் சாலைக்கு 899 கோடி, தொப்பூர் கணவாய் உயர் மட்டச் சாலைத் திட்டத்திற்கு 775 கோடி, 75 ஆண்டு காலக் கோரிக்கையை ஏற்று அனைத்து மலைப்பகுதிகளுக்கும் சாலை வசதி செய்ய 173 கோடி, அ.பள்ளிப்பட்டி மஞ்சவாடி தேசிய நெடுஞ்சாலை 170 கோடி, ஓசூர் ஓமலூர் வரை இரட்டை ரயில் பாதை திட்டம் 100 கோடி, மொரப்பூர் தருமபுரி ரயில் திட்டத்திற்கு 100 கோடி, தொப்பூர் பவானி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு 100 கோடி என நிதி பட்டியலை போஸ்டரில் குறிப்பிட்டு எங்கள் எம்பி எங்களோடு தான் இருக்கிறார், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மக்கள் என நகர்ப்பகுதிகளின் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டி இருந்தனர். இது தருமபுரி மக்களிடையே தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
இதே போல் மதுரை மாவட்டப் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த கண்டா வரச்சொல்லுங்க போஸ்டருக்கு பதிலளிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன் எம்.பி சு.வெங்கடேசன், அந்த போஸ்டர் அருகே நின்று புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளப் பங்கங்களில் 'i am waiting' எனப் பதிவிட்டிருந்தார். மேலும் #கையோடுகூட்டிவாருங்க என்ற ஹேஸ்டேக் உடன் பதிவிட்டிருந்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலங்களவைக்குச் செல்கிறார் கமல்ஹாசன் - மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை!