தருமபுரி:கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, கர்நாடகாவில் இருந்து அணைக்கு வந்து சேரும் நீரின் அளவைப் பொறுத்து அதிகரித்தும், குறைந்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு 75 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று நீர்வரத்து 5,000 கன அடி நீர் குறைந்து, காலை நிலவரப்படி 70 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. மேலும், நீர் வரத்து பகல் 1 மணி நிலவரப்படி 53,000 கனஅடியாக மேலும் சரிந்தது.
இவ்வாறு நீா்வரத்து 53 ஆயிரம் கனஅடிக்கு மேல் உள்ளதால், ஒகேனக்கல் மெயின் அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஏழாவது நாளாக தடை விதித்துள்ளது. மேலும், நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி நீரில் மூழ்கி ஆற்றுப்பகுதியும், அருவிப் பகுதியும் ஒரே நீர்மட்ட அளவில் காணப்படுகிறது.