சென்னை: வேப்பேரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு (IVMS), பருந்து, மற்றும் நிவாரணம் ஆகிய 3 செயலிகளையும், மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள "பந்தம்" என்ற புதிய திட்டத்தையும் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். பின்னர் இந்த செயலி குறித்து டிஜிபி சங்கர் ஜிவால், காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் விவரித்தனர்.
ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு (IVMS - Integrated Vehicle Monitoring System):சென்னையில் காணாமல் போன மற்றும் திருடு போன வாகனங்களை கண்டுபிடிக்கவும், இவ்வாகனங்களை குற்ற நபர்கள் பயன்படுத்தி சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்கவும், ரூ.1.81 கோடி செலவில் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
திருடு போன வாகனங்களின் பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் இதர வாகனங்களின் விவரங்கள் IVMSஇல் பதிவேற்றம் செய்யப்பட்டு சென்னையில் 25 இடங்களில், IVMS உள்ளடக்கிய 75 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், நெருக்கடியான இடங்களில், கூடுதலாக 50 நகரும் கேமராக்களும் தேவைக்கேற்ப நிறுத்தப்படும்.
இதனால், மேற்படி கேமராக்களில் பதிவாகும் வாகனங்கள் மற்றும் சந்தேக வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு அந்த வாகனங்களின் உண்மையான விவரங்கள் காண்பிக்கப்படும் போது, அவை திருடு போன வாகனமா அல்லது உண்மையான வாகன பதிவெண்ணா என்பதை எச்சரிக்கை செய்யும்.
மேலும், திருடப்பட்ட அல்லது காணாமல் போன வாகனம் என்றால் கண்டுபிடிக்கப்பட்டதும், கண்காணிப்பு அதிகாரிகளுக்கு உடனடி எச்சரிக்கை செய்தியை அறிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, செயின் மற்றும் செல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வாகனங்களின் பதிவு எண்கள் கண்டறியப்பட்டால், IVMS மூலம் உடனடி எச்சரிக்கைகளை உருவாக்கும்.
பருந்து செயலி:சென்னையில் உள்ள 104 காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு அல்லாத குற்றவாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் வசதி, உயர்தர தேடல் தகவல்கள், புதுப்பிக்கப்பட்ட விவரக் குறிப்பு பராமரித்தல், குற்றத்தின் அடிப்படையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் தளமாக ’பருந்து’ செயலி செயல்படுகிறது.