சென்னை:கடந்த மே 10ஆம் தேதி மாநில அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில், "ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால், அவர்களுடைய ஜாமீனை ரத்து செய்ய அரசு குற்றவியல் வழக்கறிஞர் நடவடிக்கை எடுக்க காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும்.
நீதிமன்றங்கள் விதித்த நிபந்தனைகளை மீறுபவர்களின் ஜாமீனை ரத்து செய்ய காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும். கடுமையான குற்ற வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்தி, உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதுடன், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்த வேண்டும்.
ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் சாட்சிகளைக் கலைப்பது, மிரட்டுவது போன்ற சட்ட விதிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால், விசாரணை அதிகாரி அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை ஆலோசித்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால், தொடர் குற்றங்களில் குற்றவாளிகள் ஈடுபடுவது தடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.