சென்னை: அயலக தமிழர் நல வாரியத்தில் 26 ஆயிரம் பேர் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஏற்பாட்டில் ‘அயலகத் தமிழர் தினம் 2025’ நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (ஜனவரி 11) சனிக்கிழமை நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
பின்னர் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “கடந்த ஆண்டு தமிழ் வெல்லும் என்ற கருப்பொருளில் அயலகத் தமிழர் தின விழாவை தொடங்கி வைத்தேன். இந்த வருடம், ‘எத்திசையும் தமிழணங்கே’ என்ற கருப்பொருளில் இந்த விழாவை தொடங்கி வைக்கிறேன். உலகெங்கும் வாழும் தமிழர்களை கருத்திற்கொண்டு, அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையை தமிழக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளது.
அயலத் தமிழர் நலனுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து உழைத்து வருகிறார். இன்று அயலக தமிழர் நல வாரியத்தில் 26 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உலக அளவில் தமிழர்களின் உழைப்பும் ஆற்றலும் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கூகிள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் என உலகின் தலைசிறந்த அனைத்து நிறுவனங்களிலும், தமிழர்களின் திறமைக்கு தனி மதிப்பு இருக்கிறது. அங்கெல்லாம், முக்கியப் பொறுப்புகளில் தமிழ் மக்கள் பணியாற்றுகிறார்கள்.
இதையும் படிங்க:'நெஞ்சம் பதறுகிறது'.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக அறிவிப்பு..!
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 500 பேரை அயலகத் தமிழர் நலத்துறை மீட்டு வந்திருக்கிறது. அயலகத் தமிழர் நலனுக்காக திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களுக்காக உழைக்கும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இந்த வருடம், புதிதாக வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்கும், நமக்கும் இணைப்பை ஏற்படுத்தும் தமிழர்களுக்கு ‘சிறந்த பண்பாட்டுத் தூதுவர்’ விருது வழங்கப்படுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “வேர்களைத்தேடி விழுதுகள் வருவது போல, தாய்மடியைத் தேடி பிள்ளைகள் வருவது போல 50-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அயலகத் தமிழர்கள் இச்சிறப்புக்குரிய நிகழ்வில் பங்கேற்க வருகை தந்திருக்கின்றனர். அயல் நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளாக, அரசுப் பொறுப்புகளில் உள்ளவர்களாக, நிறுவனங்களில் - தமிழ்ச்சங்கங்களில் பொறுப்புகளில் உள்ளவர்களாகத் திகழும் பல நூறு தமிழ் சான்றோரை ஒற்றைக் குடையின் கீழ் சந்தித்ததில் மகிழ்ச்சி கொள்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.