சென்னை: தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெறும் கபடி போட்டி பஞ்சாபில் உள்ள பதிலா நகரில் கடந்த 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து பெரியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் என மூன்று பல்கலைக்கழக அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், இன்று (ஜன.24) காலை நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணியும், பஞ்சாப் அணியும் மோதின. தமிழ்நாடு அணி வெற்றி புள்ளிகளை பெற்றும் போட்டி நடுவர் புள்ளி மதிப்பை வழங்காமல் பஞ்சாப் அணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு அணி வெற்றி பெறும் சூழலில் இருக்கும் போது பஞ்சாப் அணியின் வீராங்கனைகளும், அவர்களின் பயிற்சியாளரும் தமிழ்நாடு வீராங்கனைகளை தாக்க முயல்வதும், திட்டுவதும் போன்ற செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அழகப்பா பல்கலைக்கழக அணியின் பயிற்சியாளர் பாண்டியராஜை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. அத்துடன், இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பஞ்சாபில் உள்ள தமிழ்நாடு மாணவிகள் பாதுகாப்பாக உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி (ETV Bharat Tamil Nadu) இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது;
2024 -25 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கான பெண்கள் கபடி போட்டி பஞ்சாப்மாநிலம்பதிண்டாமாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டில் இருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்களிலிருந்து 36 வீராங்கனைகள் பங்கேற்றனர். இன்று அன்னை தெரசா பல்கலைக்கழக அணிக்கும், பர்கந்தா பல்கலைக்கழக அணிக்கும் இடையே நடந்த போட்டியில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதல் தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக உடனடியாக சம்பந்தப்பட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரை தொடர்பு கொண்ட முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
சிராய்ப்பு மட்டுமே
போட்டி நடந்த போது புள்ளிகள் தொடர்பாக சிறிது வாக்குவாதம் ஏற்பட்டதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. விளையாட்டு வீராங்கனைகளை பதிலாவில் இருந்து டெல்லி அழைத்து செல்ல பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு கிளம்பி உள்ளனர். கைது செய்யப்பட்ட பயிற்சியாளர் பாண்டியராஜை பஞ்சாப் காவல்துறையினர் விடுவித்துள்ளனர். அங்கு தற்போது பதட்டமான சூழ்நிலை இல்லை. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாரும் அச்சம் கொள்ள வேண்டாம், வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
மாணவிகள் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை; சிராய்ப்பு மட்டுமே ஏற்பட்டு இருந்தது. அனைத்து மாணவிகளும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது இன்னும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்'' என தெரிவித்தார்.